ஏனல் விளையாட் டினியில்லை யென்று மானற் றோழி மடந்தைக் குரைத்தது (138) என்பவை அவற்றுள் சில. உரையில் அமைந்துள்ள அகப்பொருள் சூத்திரங்கள் மிக விளக்கமானவை; நீளமானவை. கொளுக்களும் சூத்திரங்களும் இயற்றியர் யார் என்று அறியமுடியவில்லை. டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், “திருச்சிற்றம்பலக் கோவையார் உரையில், பேராசிரியர் அந்நூலுக்கு ஏற்பக் காட்டும் சூத்திரங்கள் ஓர் அகப்பொருள் இலக்கண நூலில் உள்ளனவோ அன்றி, அவராக அமைத்துக்கொண்ட உரைச் சூத்திரங்களோ இன்ன என்று துணிய முடியவில்லை” என்று கூறுகின்றார்.* சமயக் கருத்துக்கள் பேராசிரியர் சைவ சமயத்தவர். ஆதலின், வேற்று மதத்தவராகிய சமண பௌத்தரை வேதத்தொடு முரண்பட்டார் என்று குறிப்பிடுகின்றார். மூல நூலில் இல்லாத சில கருத்துகளையும் நுழைத்து உரை எழுதுகின்றார். அத்தகைய இடங்கள் சிலவற்றைக் கீழே காணலாம். குறுகலர் ஊர் தீங்கில் புகச் செற்ற கொற்றவன் - குறுகாதார் புரங்கள் பாசண்ட தருமமாகிய தீங்கிலே புகுதலான் அவற்றைக் கெடுத்த வெற்றியை உடையான் (13). அம்பலத்தோன் எல்லை செல்குவோர் என்றது, அவர் சீவன் முத்தராய் இருத்தல். அஃதாவது, சீவன் உடனிருக்கும் போதே முத்தியை அடைந்திருத்தல். முத்தியாவது எங்கும் ஒக்க வியோத்தியை அடைந்திருத்தல. இஃது அகண்ட பரிபூரணம் என்றபடி (197). தில்லைத் தொல்லோனைக் காணாதவர் - தில்லைக்கண் உள்ளோனாகிய பழையோனைக் குருமுகத்தால் அறியாதார் (284). நயவுரை பேராசிரியர் நயவுரை எழுதும் இடங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: சிந்தாமணி - ஒருவன் தவம்செய்து பெறும் சிந்தாமணி (12). நிறை - ஐம்புலன்களையும் அடக்குதல் (31). பிழை கொண்டு ஒருவி, கெடாது அன்பு செய்யின் - அடைந்தார் பிழைப்பின், தலையாயினார் பிழையை * தமிழ் நெறி விளக்கம் (உ.வே.சா. பதிப்பு) முகவுரை, பக்கம். 7 |