செய்தலின் அமிர்தமாய், துன்பத்தைச் செய்தலின் அணங்காய்” (39 என்றும், “அமிழ்தே, அணங்கே என்றான் - இன்பமும் துன்பமும் ஒருங்கு நிகழ்தலின்” (41) என்றும் நயங்கூறுகின்றார். கார்த்தரங் கம்திரை தோணி சுறாக்கடல் மீன்எறிவோர் போர்த் தரங்கம் துறை மானும் (187) என்ற பகுதியில் உவமையைப் பின்வருமாறு விளக்குகின்றார். “குதிரைத் திரள் தரங்கத்திற்கும், தேர் தோணிக்கும், யானை சுறாவிற்கும் காலாள் மீன் எறிவோர்க்கும், போர்க்களம் கடற்கும் உவமையாக உரைக்க”. “மதிக் கமலம் எழில் தந்தென பொழில் ஆயத்துச் சேர்க” (124) என்பதில் உள்ள உவமைக்குப் பேராசிரியர் பின்வருமாறு விளக்கம் தருகின்றார்: “கமலத்தோடு மதிக்கு ஒத்த பண்பு வெண்மையும் வடிவும் பொலிவும், மதியோடு தலைமகட்கு ஒத்த பண்பு, கட்கு இனிமையும் சுற்றத்திடை அதனின் மிக்குப் பொலிதலும். இவ்வாறு ஒத்த பண்பு வேறுபடுதலான் உவமைக்கு உவமை ஆகாமை அறிந்துகொள்க”. கொடைத்தன்மைக்குக் காரும், கற்பகமும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றைப் பேராசிரியர் “வேண்டாமைக் கொடுத்தலின் காரோடு ஒக்கும்; வேண்டக் கொடுத்தலின் அழகிய கற்பகத்தோடு ஒக்கும்” என்று விளக்கிக் காட்டுகின்றார் (400). இந்த உவமை விளக்கத்தை நச்சினினார்க்கினியர் சீவகசிந்தாமணி உரையில் மேற்கொண்டுள்ளார். ஆராய்ச்சியும் விளக்கமும் பேராசிரியர் சில பாடல்களுக்கு மிக நுட்பமாய் - ஆழமாய்ப் பொருள் எழுதுகின்றார். ‘ஈசற்குயான்’ என்ற பாடலுக்கும் (109) திரு என்ற சொல்லுக்கும் இவர்தரும் விளக்கம் மிக அருமையானவை. அவற்றைக் கீழே காண்போம்: நோக்கு ஈசற்கு யான்வைத்த அன்பின் அகன்றுஅவன் வாங்கியஎன் பாசத்தின் கார்என்று அவன்தில்லை யின்னொளி போன்றுஅவன்தோள் |