பூசத்திரு நீறுஎன வெளுத்து ஆங்கவன் பூங்கழல்யாம் பேசத்திரு வார்த்தை யின்பெரு நீளம் பெருங்கண்களே. (109) தில்லையின் ஒளிபோறல் தில்லையின் ஒளிபோலும் ஒளியை உடைத்தாதல். ஆகவே தில்லையே உவமையாம். பூசத் திருநீறு வெள்ளிதாய்த் தோன்றுமாறுபோல வெளுத்து என்றும், பேசத் திருவார்த்தை நெடிய ஆயினாற் போலப் பெருநீளமாம் என்றும் வினை எச்சமாக்கிச் சில சொல் வருவித்து உரைப்பினும் அமையும். பெரு நீளமாம் என ஆக்கம் வருவித்துத் தொழிற்பட உரைக்க. கண்களால் பெரிதும் இடர்ப்பட்டான் ஆகலானும், தோழியைத் தனக்குக் காட்டின பேருதவியை உடையன ஆகலானும், முன்னர்க் கண்மலர்ச் செங்கழுநீர் என்றும் அமையாது, பின்னும் இவ்வாறு கூறினான். கண்ணிற்குப் பிறிதுவகையான் உவமம் கூறாது இங்ஙனம் அகலம் முதலியன கூறவேண்டியது எற்றிற்கு எனின், அவை கண்ணிற்கு இலக்கணமும் காட்டியவாறாம். என்னை இலக்கணம் ஆமாறு? கண்ணிற்கு இயல்பு கசடறக் கிளப்பின் வெண்மை கருமை செம்மை அகலம் நீளம் ஒளியென நிகழ்த்துவர் புலவர். ஆயின், இதனுள் செம்மை கண்டிலேம் என்பார்க்குச் செம்மையும் கூறிற்று. அவன் தோளிற் பூசத் திருநீறு என்றதனால் சிவப்பும் சொல்லியது ஆயிற்று. அது செம்மையால் தோன்றும் வரியென அறிக. யான்பேசத் திருவார்த்தை என்னாது யாம் என்றது என்னை எனின், திருவார்த்தை பேசும் அன்பர் பலர் ஆகலான் யாம் என்று பலராகக் கூறினார். திரு திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை. நோக்கம் என்றது அழகு. இஃது என் சொல்லியவாறோ எனின், யாவன் ஒருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக் கண்டவற்கு அவ் பொருள்மேல் சென்ற விருப்பத்தோட கூடிய அழகு. அதன்மேல் அவற்கு விருப்பம் சேறல் அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வகையானும் பிறிது ஒன்றற்கு இல்லாமையால், திரு என்றது அழகுக்கே பெயராயிற்று. |