அங்ஙனம் ஆயின் இது செய்யுளின் ஒழிய, வழக்கினும் வருவது உண்டோ எனின் உண்டு; கோயிலைத் திருக்கோயில் என்றும் கோயில் வாயிலைத் திருவாயில் என்றும், அலகைத் திருவலகு என்றும், பாதுகையைத் திருவடிநிலை என்றும் வழங்கும் இத் தொடக்கத்தன எல்லாம் திருமகளை நோக்கி எழுந்தன அல்ல. அது கண்டவனுடைய விரும்பத்தானே எழுந்தது. ஆதலானும் திரு என்பது அழகு என்றே அறிக. அதனால் திரு என்பது கண்டாரால் விருப்பப்படும் தன்மை நோக்கமே. அல்லதூஉம் தான் கண்ட வடிவின் பெருமையைப் பாராட்டுவான் ஆகலான், ஒருத்தி இருந்த தவிசை இவளுக்கு முகமாகக் கூறுதல் வழுவாம். ஆதலால் தான்கண்ட வடிவின் உயர்ச்சியையே கூறினான் எனக் கொள்க. மேற்கோள் நூல்கள் பேராசிரியர் தம் உரையில் பல நூல்களை மேற்கோள் காட்டியுள்ளார். திருச்சதகம் (114), திவாகரம் (1), தொல்காப்பியம், இறையனார் களவியல், திருவாசகம் ஆகிய நூல்களிலிருந்து மேற்கோள் தருகின்றார். பெரிய புராணக் கருத்தும் ஓரிடத்தில் இடம்பெறுகின்றது. “தில்லையான் ஏவலாவது, எல்லா உயிர்களையும் அரசன் காக்க என்னும் தருமநூல் விதி. காத்தலாவது தன் வினை செய்வாரானும், கள்வரானும், பகைவரானும் உயிர்கட்கு வரும் அச்சத்தை நீக்குதல்” (312)*. பேராசிரியர் பல இடங்களில் அணிநூல் கருத்தைக் குறிப்பிடுகின்றார். பரியாயம் (289), முயற்சி விலக்கு (234), தற்குறிப்பேற்றம் (185), ஒற்றுமைக் கொளுவுதல் (195) உயர்ச்சி வேற்றமை (217) ஆகிய அணிகளை இவர் குறிப்பிடுகின்றார். அகத்திணை விளக்கம் அகத்திணை இலக்கணத்தை இவர் நன்கு விளக்கிச் செல்லுகின்றார். சான்றுகள் சில காண்போம்: குறிவழிக் காண்டல் என்பது குறிவழிச் சென்ற பாங்கன் தன்னை அவள் காணாமல், தான் அவளைக் காண்பதோர் அணிமைக்கண் நின்று, ‘அவன் சொன்ன இடமும் இதுவே, இயலும் இவையே; இவளும் அவளே’ என்று ஐயமறத் தெளியக் காணா நிற்றல். * “மாநிலம் காவல் ஆவான்” - பெரிய. திருநகரச்சிறப்பு - 36. |