பக்கம் எண் :

585ஆய்வு

தருவதால் அந்நூலில் இவர்க்குள்ள பற்றும் பயிற்சியும் வெளிப்படும்.
தேவாரத்தைத் திருப்பாட்டு என்றும், சிறுபாணாற்றுப் படையை
சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை என்றும் போற்றி மேற்கோள்
தருகின்றார். ஓரிடத்தில் (தக்க-425) “இவர் (ஒட்டக்கூத்தர்) வளையாபதியை
நினைத்தார், கவியழகு வேண்டி” என்கின்றார். மற்றோரிடத்தில் (தக்க-54)
“சிலம்பிபொதி செங்காய் - இது குறுந்தொகை” என்று கூறுகின்றார்.
இப்பாட்டு குறுந்தொகையில் காணப்படவில்லை.

      சொல்லும் பொருளும்: உலக வழக்குச் சொற்களை இவர் உரையில்
காணலாம். ஒரு சொல்லிற்குரிய இரண்டு சொற்களையும் சேர்த்துப் பொருள்
எழுதுவது இவர் வழக்கம். அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன:

     அலகில்  - குற்றமும் கணக்கும் இல்லாத (39).

     தனித்துரகம் - தனியே ஒன்றாகிச் சமானமின்றி இருக்கும் குதிரை (475).

     பள்ளிவேலை - கோயிலும் படுக்கையுமான சமுத்திரம் (54).

     மாயோள் - மாயா சக்தியாய், கருநிறத்தையுடையாள் (104.).

      இலக்கணக் குறிப்பு: இவர், உங்கள் உள் என்பன தமிழிற் பழைய
வழக்கல்ல என்பர் (186, 604). பிராகிருதத்தைச் சிதைந்த தமிழ் (323) என்றும்,
விகுதியை அடைசொல் (463) என்றும், அவாய் நிலையை வேண்டப்பாடு
என்றும் (704) குறிப்பிடுகின்றார்.

      உரையில் உள்ள உவமைகள்: அரசன் அல்லாதோர் முடியைத்
தம் தலையில் வைத்துக்கொள்ளவும் சிங்காதனத்தில் ஏறவும் பெறாதது போல.

     பித்த தோஷத்திற்குப் பால் கைத்தாற்போல

     மாம்பூ பனிக்குச் கருகுகின்றது போல.

4. மூவருலா - பழையவுரை

     மூவருலா என்ற நூலில் அடங்கியுள்ள மூன்று உலாக்களில்
குலோத்துங்கசோழன் உலா ஒன்றிற்கு மட்டுமே பழையவுரை உள்ளது.
அவ்வுரையில் வடசொற்களும் பேச்சு வழக்கு மொழியும் கலந்துள்ளன.
தக்கயாகப்பரணி உரையின் இயல்புகள் பல இடங்களில் உள்ளன.
அவ்வுரையாசிரியர்க்கு வரலாற்றுப் புலமை இல்லை; சோழ மன்னர்களைப்
பற்றிய விவரம் தெரியவில்லை. இலக்கணக் குறிப்பும் நயமும் போதிய
அளவு உரையில் உண்டு.