பக்கம் எண் :

உரையாசிரியர்கள்590

இன்பமும், மேல் உலகத்தில், தன் நிழலில் நிற்பவர் பெற நினைத்தவற்றை
எல்லாம் உடனே தருகின்ற கற்பக மரத்தின் நிழலில் நின்றிருக்கும்போது
தோன்றுகின்ற இன்பமும் கம்பன் கவிதையைக் கற்கும்போது அடையும்
களிப்புக்கு இணையாகா”.

     இக் கருத்தைப் பின்வரும் பாடல் அறிவிக்கின்றது:

    இம்பர் நாட்டின் செல்வமெல்லாம்
         எய்தி அரசரோ(டு) இருந்தாலும்
    உம்பர் நாட்டின் கற்பகக்கா
         ஓங்கு நீழல் இருந்தாலும்
    செம்பொன் மேரு அனையபுயத்
         திறல்சேர் இராமன் திருக்கதையில்
    கம்ப நாடன் கவிதையிற்போல்
         கற்றோர்க்(கு) இதயம் களியாதே.

     இந்தப் பாடல், கம்பரது கவிதையின்மீது தமிழ் மக்களுக்கு உள்ள
ஆர்வத்தையும், கம்பரின் சிறப்பையும் போற்றியுரைக்கின்றது.

     கலைமகளைப் புலவர்கள் தாய் என்றும், தெய்வம் என்றும் போற்றுவர்.
ஆனால், கம்பர் மறைந்த நாளில் பெரிதும் துன்புற்ற புலவர் ஒருவர் பாடிய
பாடல், கலைமகள் கம்பனுக்கு மனைவி என்றும், கணவனாகிய கம்பன்
இறந்ததால் கலைமகள் மங்கலநாண் இழந்தாள் என்றும் கூறுகின்றது.

    இன்றோநம் கம்பன் இறந்தநாள் இப்புவியில்
    இன்றோநம் புன்கவிகட்கு ஏற்றநாள் - இன்றோதான்
    பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப
    நாமடந்தை நூல்இழந்த நாள்.

     இந்தப் பாடலைப் படிக்கும்போது ஹோமரைப் பற்றி ஐரோப்பியர்
கூறும் புகழ் மொழி நினைவுக்கு வருகின்றது.

     “நெடுநாள் மகப்பேறு இன்றி வருந்திய இயற்கையன்னை ஹோமரை
ஈன்றெடுத்தபின், மகப்பேற்று அற்று விட்டாள்!”

     இத்தகைய புகழுரைகள் யாவும் கற்றோர் உலகம், புலவர்களை
எவ்வளவு மதித்துப் போற்றி வருகின்றது என்பதை விளக்குகின்றன.

     தமிழச் சாதி அமரத்தன்மை வாய்ந்தது என்று எண்ணிப் பாரதியார்
இறும்பூது எய்துவதற்கு உரிய காரணங்களைப் பின்வருமாறு கூறுகின்றார்.

    சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
    திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின்