பக்கம் எண் :

591ஆய்வு

    ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
    எல்லைஒன்று இன்மை எனும்பொருள் அதனைக்
    கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
    முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்
    சாதியை அமரத் தன்மை வாய்ந்ததுஎன்று
    உறுதி கொண்டு இருந்தேன்

    இவ்வாறு போற்றுவார் ஒருபுறம் இருப்பினும், கம்பருக்குக்
காலந்தோறும் எதிர்ப்பு இருந்து வந்திருக்கிறது. கம்பர் வாழ்ந்த காலத்தில்
ஒட்டக்கூத்தர் இவரை எதிர்த்தார் என்று வாய்மொழிக் கதை கூறுகின்றது.
உரையாசிரியர்கள் கம்பர் பாடல்களை மேற்கோள் தராமல் ஒதுக்கிவிட்டனர்.
ஆனால் கம்பரைப் பொதுமக்கள் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றினர்;
அவரது கவிதைகளைச் சுவைத்து மகிழ்ந்தனர்;  அவர் கூறும் இராமன்
கதையில் திளைத்தனர. கதை சொல்லும் கலைஞர்கள் கம்பராமாயணத்தை
மக்களிடையே பரப்பி வந்தனர்.

     மக்கள் கவிஞராக விளங்கிய கம்பரின் இராமாணத்திற்குப்
பழங்காலத்தில் புலவர்கள் யாரும் உரை எழுதவில்லை. பத்தொன்பதாம்
நூற்றாண்டில் அச்சு இயந்திரம் தோன்றிய பிறகுதான் உரை இயற்றிய
கம்பராமாயணத்தைப் புலவர்கள் சிலர் வெளியிட்டனர்.

     திரிசிரபுரம் வி. கோவிந்தப்பிள்ளை (?-1890) சுந்தர காண்டத்திற்கு
1871-ஆம் ஆண்டில் உரை இயற்றி வெளியிட்டார். பால காண்டத்திற்கு
இராமசாமி நாயுடு இயற்றிய உரை 1887-ல் வெளிவந்தது. சுப்பராயச்
செட்டியார் (?-1894) அயோத்தியா காண்டத்திற்கு உரை இயற்றினார்.
1896-இல் திருமயிலை சண்முகம் பிள்ளை அயோத்தியா காண்டத்திற்கு
விளக்கம் எழுதினார். உடுமலைப்பேட்டை மு. ரா. கந்தசாமிக் கவிராயர் (?-
1948) ஆரணிய காண்டத்திற்கு 1903-இல் உரை இயற்றினார். இவர்களுக்குப்
பின் வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் கம்பராமாயணம் முழுமைக்கும்
சிறந்த விளக்கவுரை எழுதி வெளியிட்டுள்ளார்.

இன்கவித் திரட்டும் உரையும்

    ஆழ்வார்குறிச்சி வெ.ப. சுப்பிரமணிய முதலியார் (1857-1964), ‘கம்ப
ராமாயண இன் கவித் திரட்டும் உரையும்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.
இந்த நூல், தொடர் கட்டுரையாகச் செந்தமிழ் இதழில் வெளிவந்தது. கதைத்
தொடர்ச்சியுடன் அமைந்த பாடல்களை ஒன்று சேர்த்து அமைத்து இனிய
விளக்கம் எழுதியுள்ளார்.