பக்கம் எண் :

உரையாசிரியர்கள்594

பரவி இருந்தன. ஆனால், பிற்காலத்தில் அவை எக் காரணத்தாலோ
அழிந்துபோயின. இடைக்காலத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப்
பின் கம்பரும் வில்லிபுத்தூராரும் இயற்றிய இராமாயணமும் பாரதமும்
மக்களிடையே பரவின. இவ்விரு நூல்களுக்கும் மிகப் பிற்காலத்தில்தான்
உரைகள் தோன்றின.

     பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தலபுராணங்கள்
பல தோன்றின. அப்புராணங்களில் கந்தபுராணம், தணிகைபுராணம்,
காஞ்சிபுராணம், திருவிளையாடல் புராணம், அரிச்சந்திர புராணம், நைடதம்
ஆகியவை தவிர ஏனைய புராணங்களின் பெயரும் தெரியாமல் முடங்கின;
படிப்பாரும் எடுப்பாரும் இன்றி ஏடுகளாய்க் கிடந்தன. இப்புராணங்களுக்கு
உரைகள் எழுதி, மக்களிடையே பரப்பும் முயற்சி பத்தொன்பதாம்
நூற்றாண்டில் தொடங்கியது.

     இதிகாசம் புராணம் ஆகியவற்றிற்குத் தோன்றிய உரைகளைக்
காண்போம்;

     பாரத உரை - அரசஞ் சண்முகனார்.

     பாரதம், ஆதிபருவம்  உரை - பொன்னம்பலம் பிள்ளை (19- நூற்).

     திருவிளையாடற் புராண உரை - இராமலிங்க சுவாமி பிள்ளை (? - 1801).

     திருவிளையாடற் புராண உரை - ஈக்காடு இரத்தின வேலு முதலியார்.

     நைடத உரை - காஞ்சிகுமார சுவாமி தேசிகர் (1842).

     மயூரகிரிப் புரணா உரை - நல்லூர் பொன்னம்பலப் பிள்ளை (1836 -
1902).

     கூர்ம புராண விரிவுரை - நா. கதிரைவேல் பிள்ளை (1844-1907).

     அருணாசல புராண உரை - மழவை மகாலிங்கர் (1900).

     திருச்செந்தூர்ப் புராணம் உரை - நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதர்;
மாப்பண முதலியார்.

     பழனித்தல புராண உரை - நா. கதிரைவேல் பிள்ளை (1844- 1907).

     திருவாதவூரார் புராண உரை - குமாரதேவர்.

     விசுவ புராண உரை - மயிலாடுபுரம் கிருஷ்ணஐயர் (1894).