தேவயம்பாடி சுப்பிரமணிய ஐயர் திருவிரிஞ்சை புராண வசனம். அருணாசலக் கவுண்டர் மூர்த்திமலைப் புராண வசனம் தஞ்சைக் கலியபெருமாள் பிள்ளை திருமழுவாடிப் புராண வசனம். புதுவை நயினாத்தை முதலியார் ஆரிய புராண வசனம் (1792). 10. நீதி நூல் உரைகள் துள்ளித் திரிகின்ற பருவத்தில் துடுக்கு அடக்கிப் பள்ளியில் பயில்கின்ற சிறுவர்களுக்கு நீதி புகட்டுகின்ற வகையில், தமிழில் பல சிறந்த நூல்கள் உள்ளன. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, உலக நீதி, நறுத்தொகை (வெற்றி வேற்கை), நன்னெறி ஆகிய ஏழு நூல்களையும் குழந்தைக் குறுந்தமிழ் என்று டாக்டர் வ.சுப. மாணிக்கனார் போற்றுகின்றார். ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை பாத்திசேர் நல்வழி பண்புலகம் - பூத்த நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக் குறுந்தமிழ் என்றறிந்து கொள் இவையேயன்றி நீதிவெண்பா நீதிநெறி விளக்கம் அறநெறிச்சாரம் ஆகிய மூன்றும் சிறுவர்களுக்கு ஏற்ற நீதி நூல்கள். ஆங்கிலேயர் நம் நாட்டில் பள்ளிகள் நிறுவி, பாடதிட்டங்களை அமைத்துக் கல்வியைப் பரப்பத் தொடங்கிய காலத்தில் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - நீதிகள் பாட நூலில் இடம்பெற்றன. அவற்றைப் பதிப்பிக்கவும் அவற்றிற்கு எளிய உரைகள் எழுதவும் பலர் முன் வந்தனர். 1868-ஆம் ஆண்டில் கா. பச்சையப்ப முதலியார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை ஆகிய நூல்களுக்கு உரை இயற்றி வெளியிட்டார். 1898-ஆம் ஆண்டு ஆத்திசூடிக்கு எஸ். சாமிநாத ஐயரும், 1873-ல் வாக்குண்டாம் என்ற நூலுக்குத் தில்லையம்பூர் சந்திர சேகரக் கவிராச பண்டிதரும் உரை இயற்றினர். நீதிவெண்பாவுக்கு ஆறுமுக நாவலர் உரை இயற்றியுள்ளார். |