பக்கம் எண் :

597ஆய்வு

     1870-ல் நல்வழிக்குப் பதவுரையும் பொழிப்புரையும் தோன்றின.
நன்னெறி 1870-ல் உரையுடன் வெளிவந்தது. நீதிவெண்பாவிற்கு 1876-இல்
காஞ்சிபுரம் சபாபதி முதலியார் உரை இயற்றினார். நீதிநெறி விளக்கத்திற்கு
1859-இல் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும், 1886-இல் முருகேச
முதலியாரும், 1943-இல் காழி சிவ. கண்ணுசாமிப் பிள்ளையும் உரை
இயற்றினர்.

     அண்மைக் காலத்தில் நீதி நூல்களுக்குப் பலர் உரை எழுதி
வெளியிட்டுள்ளனர்.

     பள்ளிச் சிறுவர்களின் பாடத் திட்டத்தில் நீதி நூல்கள் முழுமையாக
இடம்பெற வேண்டும் என்ற கருத்தை டாக்டர் வ. சுப. மாணிக்கனார்
பின்வருமாறு வற்புறுத்தி உரைக்கின்றார்.

     “இச் சுவடிகள் சிறுபருவம் தொட்டே கற்பிக்கத்தக்கன என்று ஆறுமுக
நாவலர், கீழ் வகுப்புகளில் இவற்றைச் செய்யுட் பாட நூலாக அமைத்தார்.
அதனால் சிறு நூலாயினும் ஒரு நூலை முழுதும் கற்றல், பிரித்தும் புணர்த்தும்
பயிலல், அருஞ்சொற் பொருள் அறிதல், யாப்பு மனம் பெறுதல், வரப்பண்ணி
ஒப்பித்தல் முதலாய பல மொழிக் கூறுகள் ஈரத்தடம் போலக் குழந்தைகள்
அறிவில் பதியலாயின.

     நம்முன்னோர்கள் திண்ணைப் பள்ளிகளில் இச் சிறு முது நூல்களை
முறையாகப் பயின்று குன்றாத் தமிழொலியும் குறையாகத் தமிழறிவும் வளமான
தமிழ் அடிப்படையும் வாய்த்திருந்தனர். முதுமையிலும் இளங் கல்வியை
நினைந்து நினைந்து வாழ்ந்தனர். இத் தொல் மரபுப்படி ஏழ் இளந் தமிழ்
மீண்டும் தொடக்கப்பள்ளியில் முழு நூலாக இடம் பெறுவதாக!”*

11. நோக்கு

     ஒரு பாட்டை ஆழ்ந்து பயின்று நுணுகி நோக்கி நுண் பொருள்
கண்டு வியந்துபோற்றி இலக்கியச் சுவையில் திளைத்து விளக்கம் கூறி
மகிழ்வது, தமிழிலக்கிய உலகில் பல ஆண்டுகளாக இருந்துவரும்
வழக்கமாகும். தொல்காப்பியர் செய்யுளுக்குரிய பல உறுப்புக்களில் நோக்கு
என்ற ஒன்றைக் கூறி,

    மாத்திரை முதலா அடிநிலை காறும்
    நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே


 * இலக்கிய விளக்கம் பக்கம். 117.