பக்கம் எண் :

உரையாசிரியர்கள்598

என்று அதனை விளக்குகின்றார். இச்சூத்திரத்திற்கு உரை எழுதிய
பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ‘முல்லை வைந்நுனை’ என்ற
அகநானூற்றுப் பாடலை (4) எடுத்துக்காட்டி, அதில் அரிய பெரிய
நுணுக்கங்கள் அடங்கியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு
ஏதேனும் ஒரு பாட்டில் மூழ்கி அதனை நோக்கி மகிழ்வது மற்ற
உரையாசிரியர்களிடமும் உள்ள இயல்பாகும்.

     இளம்பூரணரும் பேராசிரியரும் ‘வையங்காவலர்’ என்ற புறநானூற்றுப்
பாடலை உவம இயலில் எடுத்துக்காட்டி விளக்கம் பல கூறி நம்மை வியப்பில்
ஆழ்த்துகின்றனர்.

     நன்னூலுக்கு உரை இயற்றிய சங்கர நமசிவாயர் ‘இணர்
எரிதோய்வன்ன’ என்ற குறளுக்கு (நன்: 360) மிக விரிவாகப் பொருள்
எழுதுகின்றார்.

     திருக்கோவையாருக்கு உரை இயற்றிய பேராசிரியர் ‘ஈசற்குயான்
வைத்த’ என்ற பாடலுக்கு (109) மிக விரிவாக விளக்கம் எழுதிச்
சுவையூட்டுகின்றார்.

     இவ்வாறு பல நூற்றாண்டுகளாகப் புலவர் பெருமக்களின் பலவகையான
பாடல்களைச் சுவைத்து இன்புற்ற மரபில் வந்த ஒருவர்,

    வாக்கிற்கு அருணகிரி வாதவூ ரர்கனிவில்
    தாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு
    நக்கீர தேவர் நயத்திற்குச் சுந்தரனார்
    சொற்குறுதிக்கு அப்பரெனச் சொல்

என்று பாடியுள்ளார்.

     திருவரங்கக் கலம்பகம் சிறப்புப்பாயிரச் செய்யுள்,

    சொல்நோக்கும் பொருள்நோக்கும்
    தொடைநோக்கும் நடை நோக்கும்

என்று கூறுகின்றது.

     பாட்டை நோக்கி மகிழும் பரம்பரை, தொடர்ந்து காலந்தோறும்
வந்துள்ளது. தமிழ்த்தென்றல் திரு.வி.க. “நன்கடம்பனைப் பெற்றவள்” என்ற
அப்பர் திருப்பாட்டில் மூழ்கி அப்பாடலின் இறுதியடியாகிய ‘என் கடன்
பணி செய்து கிடப்பதே’ என்னும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்திச் சிறு நூல்
ஒன்றும் இயற்றியுள்ளார். அப்பாடல் தம்மை ஆட்கொண்ட வகையை -
அப்பாடலின் பெருமையைப் பின்வருமாறு புகழ்ந்து கூறுகின்றார்.

     “என்கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் திருவாக்கு என்
கண்ணுக்குப் புலனாகிய நாள்தொட்டு, அதை ஓதி ஓதி எனது