நாவும் தழும்பேறியது. உறக்கத்திலும் எனது நா அத்திருவாக்கை உச்சரித்துக் கொண்டிருக்கும். நான் அதை மறந்தாலும் அஃது என்னை மறப்பதில்லை. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் பொன்னுரையில் எனக்குள்ள அன்புக்கு ஓர் அளவும் உண்டோ? என்னைத் திருப்பணி வழியில் நிறுத்தி ஆட்கொண்ட அத்தமிழ்மொழி எனது குருமொழியாகும். அக் குருமொழி என்னைப் பண்படுத்தி வருவதுபோல் வேறு எம்மொழியும் பண்படுத்தி வருவதில்லை. உலகிலுள்ள அறிவு நூல்களின் திரண்ட பொருள், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பதாகவே இருக்கிறது. இவ்வொன்றே பல அறிவு நூல்களாகவும் விரிந்து நிற்கிறது” (என் கடன் பணிசெய்து கிடப்பதே (1952) (பக்கம் 12). ‘பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்’ என்னும் பாடலில் வரும் ‘நினைப்பவர் மனம்’ என்ற தொடரை அமைத்து அப்பெரியவர் சிறுநூல் ஒன்று இயற்றியுள்ளார். ‘முருகன் அல்லது அழகு’ என்ற அவரது நூலில் திரு முருகாற்றுப்படையின் சில அடிகளுக்கு விளக்கம் காணலாம். அருட்பெருஞ் சோதியாகிய இராமலிங்க சுவாமிகள் ‘உலகெலாம் உணர்ந்து’ என்ற சேக்கிழார் பாடலுக்குப் பல மணி நேரம் விரிவுரை நிகழ்த்தினார். அந்த விரிவுரை அச்சில் வந்துள்ளது. டாக்டர் மு.வ. இயற்றிய ‘ஓவச்செய்தி’, ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற நூல்களும் நோக்குவகையைச் சேர்ந்தவை. பன்மொழிப்புலவர் தெ.பொ.மீ. ‘கானல் வரியும்’, கோதண்டபாணி பிள்ளை ‘முதற் குறள் உவமை’யும், செ. வேங்டராமச் செட்டியார் ‘புனையா ஓவியம்’, ‘பெறலரும் பரிசில்’ ஆகிய நூல்களும் இயற்றியுள்ளனர். பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் குறுந்தொகைப் பாட்டின் கடவுள் வாழ்த்தாகிய ‘தாமரை புரையும்’ என்ற பாடலுக்குத் தந்துள்ள அரிய விளக்கம் படித்து மகிழத்தக்கதாகும். தமிழ்ப் பேராசிரியர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் ‘அடிபணிந்த திருமகனை’ என்ற சேக்கிழார் பாடலுக்கு (பெரிய புராணம், திருநகர்ச். சிறப்பு-48) நோக்கு என்ற நூலில் மிகச் சிறந்த விளக்கம் எழுதியுள்ளார். தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதன் சங்க இலக்கியப் பாடல்களுக்கும் திருமுறைப் பாடல்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளார். |