பக்கம் எண் :

உரையாசிரியர்கள்600

ஒரு குறள்

    புலமைச் செல்வர் ந. ரா. முருகவேள், ‘இலக்கணத்திற் கற்பனைகள்’
(1961) என்ற சிறந்த ஆய்வு நூலில் (பக்-111, 112).

    ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவும்ஓர் நோய்

என்ற குறளுக்கு மிகச் சிறந்த நுண்பொருள் விளக்கம் தந்துள்ளார்.

     1. “பிறர் சொல்லியும் கேளாமல், தாமும் உணராமல் மனம் சென்றவாறு
நடக்கும் புல்லறிவாளர்களின் புன்மையையும், அவர்கள்பால் தமக்குள்ள
வெறுப்பினையும் சீற்றத்தினையும் ஆசிரியர் திருவள்ளுவர், ‘ஏவவும்
செய்கலான் தான் தேறான்’ என முதற்கண் னகரஒற்று ஈற்றச் சொல்லால்
குறி்ப்பிடுதலாலும்;

     2. பின்னர், அதற்கு ஏற்ப ‘அம் மனிதன்’ என உயர்திணை
ஆண்பாலால் குறியாது ‘அவ்வுயிர் என அஃறிணையாகச் சுட்டுதலாலும்;

     3. அவ்வளவில் அமையாது ‘நோய்’ என உருவகம் செய்தலாலும்;

     4. நோய் போலச் சமுதாயத்தைப் பற்றிப் பீழிக்கும் அப்புலறிவாளர்கள்
‘வாழும் அளவும்’ எனற்பாலதனைப் போஒம் அளவும்’ என்று மாற்றி
உரைத்தலாலும்;

     5. நல்லவர்கள் எல்லோரும் மிக மிக விரைவில் மறைந்துவிட
இத்தகைய புல்லறிவாளர்கள் நெடுங்காலம் உலகில் உழன்று கொண்டிருக்கும்
கொடுமையினைப் ‘போஒம் அளவும்’ என்னும் அளபெடைக் குறியால்
புலப்படுத்துதலாலும் உணர்த்துகின்றார்”.