இலக்கண உரையாசிரியர்கள் - II 1. யாப்பருங்கல விருத்தியுரை தமிழ்மொழிக்குப் யாப்பு இலக்கணம் மிகவும் தொன்மையானது; வடமொழிச் சார்பும் ஊடுருவலும் இல்லாதது; தனித்தன்மையுடையது. அணி இலக்கணத்தில் வட மொழியின் செல்வாக்குப் பரவியது போல, யாப்பிலக்கணத்தில் வடமொழி நுழைய முடியவில்லை. டாக்டர் மு.வ. தமிழ்யாப்பின் பெருமையைப் பின்வருமாறு புகழ்ந்துள்ளார் (மொழி வரலாறு (1954); பக் - 385, 386): “வடமொழித் தொடர்பற்ற யாப்பிலக்கணம், பழந்தமிழில் அமைந்திருத்தல் ஆராய்ந்து போற்றுதற்கு உரியதாகும். வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா எனப் பாவும், அவற்றிற்கு ஏற்பச் செப்பல் அகவல் துள்ளல் தூங்கல் என ஓசையும் தனித்தனியே அமைந்து, தளை தொடை முதலியனவும் தனியே அமைந்துள்ள முறை வடமொழியோடு எவ்வகையிலும் தொடர்பற்றதாக உள்ளது. கலப்பற்ற தூய யாப்பிலக்கணம் ஒரு மொழிக்கு அமைய வேண்டும் எனின், அந்த மொழி அதற்குமுன் எவ்வளவு பண்பட்டுத் தனியே வளர்ந்திருக்க வேண்டும் என்பது, எண்ணிப் போற்றுதற்கு உரியதாகும்.” மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர், தமிழ் இலக்கிய வகைகளை உலகமொழிகளுடன் ஒப்பிட்டு வியந்து பின்வருமாறு போற்றுகின்றார் (பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966) பக்-37). 1. “காக்கைக் காகா கூகை என்னும் ஓர் எழுத்துப் பாட்டும்; 2. சென்னி முகமாறுளதால் என்னும் காளமேகம் மும்மடியிரட்டுறலும்; |