3. இராமலிங்க அடிகளின் மாணவர், தொழுவூர் வேலாயுத முதலியார் பாடிய பதின்பங்கி (தசபங்கி), பதிற்றுப் பதின்பங்கி (சதபங்கி) என்னும் சொல்லணிகளும்; 4. அருணகிரியார் பாடிய திருப்புகழ் வண்ணங்களும்; 5. பட்டினத்தார் பாடிய உடற்கூற்று வண்ணமும்; 6. அகப்பொருட் செய்யுட்களில் வரும் உள்ளுறை உவமையும் - போன்ற அருஞ்சுவை இன்பக்கூறுகள், வேறு எம் மொழி இலக்கியத்திலும் காணக் கிடையா”. இவையேயன்றி, நாணிக் கண் புதைத்தல் என்ற அகத்துறை ஒன்றுக்கு ஒரு கோவை நூல் தமிழில் தோன்றி இருப்பதும், எண்ணி மகழித்தக்கதாகும். இத்தகைய தனிச் சிறப்புகள் பல உடைய தமிழில் உள்ள யாப்பிலக்கணத்தைக் கற்பவர் விருப்பமுடன் பயிலும் நூல்கள் இரண்டாகும். ஒன்று யாப்பருங்கலம்; மற்றொன்று யாப்பருங்கலக்காரிகை. இவ்விரு நூல்களையும் இயற்றியவர் அமுதசாகரர் என்னும் சமணப் புலவர். அருங்கலம் என்பது சமண ஆசிரியர் பரம்பரையில் ஒரு பிரிவு; இது சங்க காலத்திற்குப் பின் தோன்றிய சமண சங்கத்தின் ஒரு பகுதி. இப் பிரவினர் தீபங்குடியில் வாழ்ந்தனர்; அழுதசாகரர் முதலியோர் இப்பிரிவினர்; ஆதலின் தம் நூலுக்கு ‘அருங்கலம்’ என்ற பெயரை இட்டனர் என்று கோபிநாதராவ் கூறுகின்றார்.* யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்ற இரு நூல்களுள் முன்னர்த் தோன்றியது யாப்பருங்கலம். அதனை அடுத்துத் தோன்றியது யாப்பருங்கலக் காரிகை. யாப்பருங்கலக் காரிகையுரை, “யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் - அலங்காரம் உடைத்தாகச் செய்யப்பட்டமையால் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து” என்று கூறுகின்றது. உரையாசிரியர் யாப்பருங்கலத்திற்கு விருத்தியுரையும் யாப்பருங்கலக் காரிகைக்குக் காண்டிகையுரையும் பழங்காலத்தில் தோன்றின. நூல் தோன்றிய மிக அண்மைக் காலத்திலேயே உரைகளும் தோன்றியுள்ளன. இவ்விரு உரைகளுள் முதலில் தோன்றியது யாப்பருங்கல விருத்தியுரையாகும். யாப்பருங்கலக் காரிகையில் பத்தாம் செய்யுளின் உரையில், “வெண்பாவினோடும் * ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1947). டாக்டர் மா. இராசமாணிக்கனார், பக்கம்.95. |