ஆசிரியத்தினோடும் வந்த மயங்கிசைக் கொச்சக்கலிப்பா யாப்பருங்கல விருத்தியுரையுள், ‘காமர் கடும் புனல்’ என்னும் பழம்பாட்டில் கண்டுகொள்க” என்று யாப்பருங்கல விருத்தியுரை சுட்டப்படுகின்றது. இரண்டு உரைகளையும் இயற்றியவர்களில் காரிகையின் உரையாசிரியர் குணசாகரர். யாப்பருங்கல விருத்தியுரைக்கு உரை இயற்றியவர் யார் என்பது பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. டாக்டர் மொ. அ. துரையரங்கனார், “(யாப்பருங்கல) விரித்தியுரையை எழுதியவர் பெருமாள் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என அவர் சிறப்பிக்கும் மயேச்சுரருடைய மாணவரோ, அவர் பரம்பரையினரோ ஆதல் வேண்டும்” என்பர் (தென்றலிலே தேன்மொழி (1958 பக்கம் 59, 60). வேறு சில அறிஞர்கள் விருத்தியுரையாசிரியரும் காரிகையுரையாசிரியரும் ஒருவரே என்பர். இவ்வாறு அவர்கள் கூறுவதற்குக் காரணங்கள் பல உள்ளன. அவற்றைக் காண்போம். 1. விருத்தியுரையில், காரிகை மேற்கோள் காட்டப்படுகின்றது. காரிகையை யாப்பருங்கலப் புறனடை என்று சுட்டுகிறது, விருத்தியுரை (விருத்தியுரை சூத் 48, 59, 68, 85, 86, 89, 92, 93). 2. காரிகையயுரை, விருத்தியுரையைச் சில இடங்களில் குறிக்கின்றது. காரிகையின் 38-ஆம் செய்யுள் உரையில் ‘அம்போதரங்கம் குறையாதே வந்தவாறு யாப்பருங்கல விருத்தியுரையுள் கண்டு கொள்க’ என்றும், 42-ஆம் செய்யுள் உரையில், ‘இவற்றிற்கு இலக்கியம் யாப்பருங்கல விருத்தியுள் கண்டு கொள்க’ என்றும் கூறியுள்ள இடங்கள் இங்கே நினைக்கத்தக்கவை. 3. இரு நூல்களின் உரையில், பலவகை ஒற்றுமைகளைக் காணலாம். மேற்கோள் காட்டும் பல செய்யுள்கள், இரு உரைகளிலும் இடம் பெறுகின்றன. யாப்பிலக்கணக் கொள்கைகள் இரு உரைகளிலும் மாறுபாடின்றி உள்ளன. உரைநடையும் ஒத்துள்ளன. ‘ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்து’ என்ற சொற்றொடர் காரிகையுரையின் தொடக்கத்திலும் விருத்தியுரை (யாப்பருங்கல விருத்தியுரை - பக்கம் 509 பவானந்தம் பிள்ளை பதிப்பு)யிலும் மாறுதலின்றி இடம் பெற்றுள்ளது. 4. யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் இரண்டையும் இயற்றிவர் அமுதசாகரர் எனில், அவ்விரு நூல்களுக்கும் உரையாசிரியர் குணசாகரர் என்னலாம். இருநூல்களுக்கும் |