நூலாசிரியர் ஒருவர், உரையாசிரியர் ஒருவர் என்பது பொருத்தமாக உள்ளது. வரலாறு யாப்பருங்கல விருத்தியுரை யாப்பருங்கலக் காரிகையுரை இரண்டினையும் இயற்றிவர் குணசாகரர் எனில் அவரைப்பற்றி அறிந்த வரலாற்றுக் குறிப்புகளைக் கூறுவோம். உரையாசிரியரான குணசாகரர், நூலாசிரியரான அமுதசாகரரின் ஆசிரியர் என்பர். நூலாசிரியரும் உரையாசிரியரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள். உரையாசிரியராகிய குணசாகரர் அருகனைப் பற்றிய துதிப்பாடல்களை விருத்தியுரையில் மேற்கோள் காட்டுகின்றார். சில இடங்களில் பிற சமயப் பாடல்களையும் காட்டுகின்றார். பொய்கையாழ்வார் பாடல் (57), இலை நலவாயினும் (திருமந் - 204) என்ற திருமூலர் பாடல் (93), கொன்றை வேந்தன் செய்யுள் (63), நக்கீரனார் பாடிய திருஎழுகூற்றிருக்கை (11-ஆம் திருமுறை) ஆகியவற்றை மேற்கோள்காட்டுகின்றார். காரிகையுரையில், எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுளுக்கு உதாரணமாக, “தாமரை புரையும்” என்ற குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தை - பெருந்தேவனார் பாட்டை முருகக் கடவுளைப் போற்றும் செய்யுளை உதாரணம் காட்டுகின்றார். விருத்தியுரையுள் மயேச்சுரர் என்ற பெயருக்குச் சிவ பெருமானுக்க உரிய பலவகையான சிறப்புப் பெயர்களைச் சேர்த்துச் சுட்டுகின்றார். இவற்றால் குணசாகரர் சமயப்பொறை மிக்கவர், எம் மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவர் என்பது விளங்கும். குணசாகரர் காலத்தை இனிக் காண்போம். நூலும் உரையும் ஒரு காலத்தில் தோன்றியவை என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். யாப்பருங்கலக் காரிகையை இளம்பூரணர், செய்யுளியலில் பல இடங்களில் மேற்கோள் காட்டுகின்றார். வீரராசேந்திரன் காலத்தில் (1064-1070) எழுந்த வீரசோழிய உரை, யாப்பருங்கல விருத்தியை மேற்கோள் காட்டுகின்றது. ஆதலின் யாப்பருங்கலத்தின் காலம் பதினோராம் நூற்றாண்டிற்கு முன் என்னலாம். * சில ஏட்டுப் பிரதிகளில் அடைமொழிப் பெயர்கள் இல்லை. எனவே பிற்காலத்தி்ல் யாரோ சேர்த்திருத்தல் கூடும் என்பர். |