‘முடிபொருள் அல்லாது அடியளவு இலவே’ என்ற நூற்பாவைத் தொல்காப்பியர் இயற்றியதாகக் காட்டுகின்றது. இந்த நூற்பா இன்றைய தொல்காப்பியப் பதிப்புகளில் இல்லை! நூலின் புகழ் யாப்பருங்கலத்தைப் போற்றிப் புகழ்கின்ற வெண்பா ஒன்று, நூலின் இறுதியில் உள்ளது. யாப்பருங்கலம் சொல்லாற் சுருங்கியது; பொருளால் பெருகியது; தொல் ஞானம் எல்லாம் விளங்குவது; அறியாமை இருளை அகற்றுவது. இத்தகைய சிறப்புடைய யாப்புநூலைக் கற்று வல்லவர் ஆயினவர் கேள்விச்செல்வம் அனைத்தையும் உணர்ந்து ஒருங்கு அறியவல்லவர் என்று கூறுகின்றது வெண்பா: சொல்லிற் சுருங்கி, பொருள்பெருகி, தொன்ஞானம் எல்லாம் விளக்கி இருளகற்றும் - நல்யாப்பு அருங்கலம் வல்லவர் தாம்அன்றே கேள்வி ஒருங்கறிய வல்லார் உணர்ந்து. 2. யாப்பருங்கலக் காரிகையுரை யாப்பருங்கலக் காரிகையுரை மிகவும் எளிமையும் தெளிவும் உடையது. கற்போர் நினைவில் என்றும் நிலைத்து நிற்கவல்ல பல சிறந்த மேற்கோள் பாடல்களைக் கொண்டது. தெளிவான யாப்பிலக்கணக் கொள்கையை உணர்த்துவது. இவ்வுரை முழுதும் உயிரோட்டமுள்ள நடையைக் காணலாம். “இந்நூல் யாது காரணமாகச் செய்யப்பட்டதோ எனின், பண்டையோர் உரைத்த தண்டமிழ்யாப்பிற் கொண்டிலாத குறியினோரைக் குறிக் கொளுவுதல் காரணமாகவும், தொல்லைப் பனுவல் துணிபொருள் உணர்ந்த நல்லவையோரை நகுவிப்பது காரணமாகவும் செய்யப்பட்டது”. “இந்நூல் யாவரால் செய்யப்பட்டதோ எனின், ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகையாக்கித் தமிழ்ப்படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமிதசாகரர் என்னும் ஆசிரியரால் செய்யப்பட்டது”. இந்த வாக்கியங்களில், ஓசைஇன்பமும் எதுகை மோனைச் சிறப்புடைய சொற்றொடரும் அமைந்திருப்பதைக் காணலாம். ஒழிபியலில் நூறுவகை வண்ணங்களை ஆராய்கின்றார். |