“ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல” (காரிகை - 24) என்ற பொருத்தமான உவமையை ஓரிடத்தில் கூறுகின்றார். “அனுப்பிராசம் என்னும் வடமொழியை வழி எதுகை என்பது தமிழ்வழக்கு” (காரிகை - 56) என்று மற்றோர் இடத்தில் குறிப்பிடுகின்றார். “செந்தமிழ் நிலம் என்பது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாகிய நான்கு எல்லைக்குட்பட்ட சோணாடு” என்பது இவர் கருத்தாகும். உதாரண முதல்நினைப்புக் காரிகை காரிகை உரையாசிரியர் எடுத்துக்காட்டிய உதாரணப் பாடல்களை நினைவில்கொள்ள, பிற்காலத்தவர் உதாரண முதல் நினைப்புக் காரிகைகளை இயற்றினார். இன்று அவை நூலாசிரியர் இயற்றியவை போலவே கருதிக் கற்கப்பட்டு வருகின்றன. 3. பெருந்தேவனார் வீரசோழியம் இலக்கண நூலுக்கு உரை இயற்றியவர் பெருந்தேனார். வீரராசேந்திரன் (1063-1070) காலத்தில் பொன்பற்றி என்னும் ஊரில் வாழ்ந்த புத்த மித்திரர், அம்மன்னன் பெயரால் இயற்றிய நூலே வீரசோழியம். இது ஐந்திலக்கணம் கூறும் நூலாகும். இந்நூலாசிரியர் பழந்தமிழ் இலக்கண மரபைப் புறக்கணித்து, வடமொழி இலக்கணக் கொள்கைகளைத் தமிழ் மொழியில் கொண்டுவந்து புகுத்தியுள்ளார். இந்நூலைப் பின்பற்றியே பிற்காலத்தில் பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து ஆகிய நூல்கள் தோன்றின. வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார், நூலாசிரியர் கருத்துடன் மிக நெருக்கமாகப் பிணைந்து செல்லுகின்றார். இருவர்க்கும் பல வகையில் ஒற்றுமை உண்டு. இருவரும் ஒரே காலத்தினர்; பௌத்த சமயத்தினர்; வடமொழிக்கும் தமிழுக்கும் இலக்கணம் ஒன்றே என்னும் கருத்துடையவர். பெருந்தேவனார் என்ற பெயருடன் பலர் இருப்பதால் அப்பெயர் முற்காலத்தில் சிறப்புப்பெற்று விளங்கிற்று எனலாம். தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பாரதம் பாடிய |