பக்கம் எண் :

உரையாசிரியர்கள்610

    போதி வேந்தன்
    சரணலா லரண் புகேம்

என்பதை உதாரணம் காட்டுகின்றார். புத்த தேவரின் துறவு, கொடை பற்றிய
பாடல்கள் பலவற்றை யாப்பதிகாரத்தில் மேற்கோளாகத் தருகின்றார்.
“மேன்மை - பெரும்பகை தாங்கும் மேன்மை. அருளொடுபுணர்ந்த
அகற்சியாம்” என்று விளக்கி, “புனிற்றுப் பசியுழந்த” என்ற பாடலைக்
காட்டிப் புத்ததேவரின் அருட் பண்பை உலகிற்கு நினைவூட்டுகின்றார்
(வீர - 109).

நூலறிவு

    பெருந்தேவனார் தம் உரையில் பல நூல்களைப் பற்றிக்
குறிப்பிடுகின்றார். இவர் குறிப்பிடும் நூல்களின் காலத்தைத் தெளிவாக
அறியலாம். பெருந்தேவனார், வீரராசேந்திரன் காலத்தவர் ஆதலின் உரையில்
காட்டப்பெறும் நூல்களின் காலத்தை அறுதி இடமுடியும்.

     பன்னிருபடலத்தைப் பெருந்தேவனார் குறிப்பிடுகின்றார் (வீர - 46).
யாப்பருங்கல விருத்தியுரை காட்டிய பல செய்யுட்களை மேற்கோளாகத்
தருகின்றார். யாப்பருங்கலக் கருத்தைத் தந்து, ‘என்றார் அமுதசாகரனார்’
என்று கூறுகின்றார்.

     தண்டியலங்காரம் காட்டிய பல செய்யுள்களை இவர் மேற்கோள்
காட்டுகின்றார். ஒன்பான்சுவை பற்றிய பாடல்கள் யாவும் தண்டியலங்காரம்
காட்டியவை.

     உவமைபற்றி இவர் கூறும் கருத்து, போற்றத்தக்கதாய் உள்ளது. அது
பின்வருமாறு:

    உவமம் எனப்படுவது அவமற விரிப்பின்
    புகழே பழியே நன்மை என்றின்ன
    நிகழும் ஒப்புமை நேர்ந்தன முறையே
   
    அவைதாம்

    கண்ணே செவியே மூக்கே நாவே
    மெய்யே மனமே விளம்பின ஆறும்
    ஐய மின்றி அறுமூன்று ஆமே.

வடமொழிப் புலமையும் பற்றும்

    பெருந்தேவனார் வட மொழிப்பற்று மிக்கவர்; புலமை உள்ளவர்.
கீழ்வரும் பகுதிகள் இவரது வடமொழிப் பற்றுக்கும் புலமைக்கும் சான்றாய்
அமையும்: