பதினைந்தாம் உடலும் (ழ், ள்) தம்முள் தேற்றக் கருநிலம் சுற்றின தேசத்துச் சிலர் வழங்குவர். “வெச்சிலை முச்சம் கச்சை எனவும், உற்றியம்போது மற்றியம் பிற்றை வாங்கி விற்றான் எனவும் பதினேழாம் உடலும் (ற்) மூன்றாம் உடலும் (ச்) தம்முள் தேற்றக் காவிரி பாய்ந்த நிலத்துச் சிலர் வழங்குவர். “நெல்லுக்கா நின்றது, வீட்டுக்கா நின்றது என்று பாலாறு பாய்ந்த நிலத்துச் சிலர் வழங்குவர்”. “மற்றும் இவனைப்பாக்க, இங்காக்க அங்காக்க எனவும், சேத்துநிலம் ஆத்துக்கால் எனவும், வாயைப் பயம் கோயி முட்டை எனவும், உசிர் மசிர் எனவும் பிறவாற்றானும் அறிவில்லாதார் தமிழைப் பிழைக்க வழங்குவர்” (வீர - 82). குண்டலகேசி முதலிய காவியங்களில் பயின்றுவந்த அரிய சொற்களைப்பற்றிப் பெருந்தேவனார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “குண்டலகேசியும் உதயணன் கதையும் முதலாக உடையவற்றில் தெரியாத சொல்லும் பொருளும் வந்தன எனின், அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லது ஆகாது என்பது. அன்றியும் அவை செய்தகாலத்து அச் சொற்களும் பொருள்களும் விளங்கி இருக்கும் என்றாலும் அமையும் எனக்கொள்க”. அயல்நாட்டுச் சொற்களைப் பற்றியும், இவரது சிந்தனை சென்றுள்ளது: “சிங்களவன் பேசுவது சிங்களம். வடுகன் பேசுவது வடுகு. துளுவன் பேசுவது துளுவு” (வீர - 54) என்றும், “வட்டா என்னும் ஆரிய தேயச் சொல்லு, வட்டை என வந்தவாறும், முருங்கா என்னும் சிங்களச் சொல்லும் முருங்கை என வந்தவாறும் கொள்க” (வீர - 59) என்றும் கூறுகின்றார். நாகரிகமும் மக்கள் வாழ்வும் பெருந்தேவனார் காலத்திலேயே சேரநாடு, மலையாளம் என்று தனிநாடாக மாறிவிட்டது. தமிழ் வழங்கும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும்போது, “குணகடல் குமரி குடகம் வேங்கடம் என்னும் இந்நான்கு எல்லைக்குள்” என்கின்றார் (வீர - 8). இவர் காலத்தில் புகார், நாகபட்டினம், தஞ்சாவூர், உறையூர் குரங்காடு துறை, மயிலாடுதுறை ஆகிய ஊர்கள் சிறப்புடன் விளங்கின என்பதை இவர் உரையால் அறியலாம். புகழார் அளகேசர் பூம்புகார் என்னும் நகராரை ஒப்பவர் ஆர் நாட்டு என்று இவர் பூம்புகார் நகர மக்களைப் புகழ்கின்றார். |