பக்கம் எண் :

615ஆய்வு

     தண்டியலங்கார நூலாசிரியர் வரலாறு பற்றி மிகுதியாக ஒன்றும்
தெரியவில்லை. தண்டியலங்கார உரை பாயிரப் பகுதி நூலாசிரியரைப் பற்றிக்
குறிப்பிடவில்லை. தண்டியலங்காரத்தின் சிறப்புப்பாயிரச் செய்யுள் ஒன்றை,
‘செந்தமிழ்’ வெளியிட்டுள்ளது.* அது பின்வருமாறு:

    வடதிசை இருந்து தென்மலை ஏகி
    மதிதவழ் குடுமிப் பொதிய மால்வரை
    இருந்தவன் தன்பால் அருந்தமிழ் உணர்ந்த
    பன்னிரு புலவரின் முன்னவன் பகர்ந்த
    தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்
    அணிபெறும் இலக்கணம் அரிதினில் தெரிந்து
    வடநூல் வழிமுறை மரபினின் வழாது
    ஈரிரண்டு எல்லையின் இகவா மும்மைப்
    பாரத இலக்கணம் பண்புறத் தழீஇத்
    திருந்திய மணிமுடிச் செம்பியன் அவையத்து
    அரும்பொருள் விளங்க யாப்பின் வகுத்தனன்
    ஆடக மன்றத்து நாடக நவிற்றும்
    வடநூல் உணர்ந்த தமிழ்நூற் புலவன்
    பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு
    வம்பவிழ் தெரியல் அம்பி காபதி
    மேவரும் தவத்தினில் பயந்த
    தாவரும் சீர்த்தித் தண்டி என்பவனே.

     தண்டியலங்காரம் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில்
இயற்றப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள பல உதாரணம் பாடல்கள்
குறிப்பிடும் ‘அநபாயன்’ இரண்டாம் குலோத்துங்கனே. அம் மன்னன்
காலத்தில் சிறப்புற்று விளங்கிய ஒட்டக்கூத்தர் புகழைச் ‘சென்று
செவியளக்கும்’ என்ற உதாரணப் பாடல் கூறுகின்றது. அச் சோழ
மன்னனின் முன்னோர் பெற்ற வெற்றிச் சிறப்புகளாகிய கலிங்கவெற்றி,
கடாரம் கொண்டது ஆகியவையும் குறிப்பிடப்படுகின்றன. கங்கை கொண்ட
சோழபுரத்தையும் சிதம்பரத்தையும் சிறப்பித்துப்பாடும் உதாரணம் பாடல்கள்
சில உள்ளன. இவை யாவும் நூலாசிரியர் வாழ்ந்த காலத்தை நமக்கு
அறிவிக்கும் தக்க சான்றுகளாகும்.

வரலாற்றுக் குறிப்புகள்

    நூலாசிரியர் இயற்றியுள்ள பல  உதாரணச் செய்யுட்கள் சோழர்
வரலாற்று ஆராய்ச்சிக்குத் துணை புரிகின்றன.


 * செந்தமிழ்; 36 பக். 385-400.