சோழ மன்னன் அனபாயனின் வீரமும் கொடையும் பல பாடல்களில் இடம் பெறுகின்றன. அன்னைபோல் எவ்வுயிரும் தாங்கும் அனபாயா நின்னையார் ஒப்பார் நிலவேந்தார் என்றும், தண்கவிகை யால்உலகம் தாங்கும் அனபாயன் வெண்கவிகைக் குள்அடங்கா வேந்தில்லை என்றும் அனபாயன் புகழப்படுகின்றான். சோழமன்னன் சிவந்த நிறம் உடையவன் என்று ஒரு பாடல் புகழ்கின்றது. ‘செய்யனே, கோழியுடையான் மகன்’ என்று அவனது திருமேனி அழகில் ஈடுபட்டுப் புலவர் பாடுகின்றார். சோழமன்னன் கலிங்கநாட்டில் பெற்ற வெற்றிகளைச் சில பாடல்கள் குறிக்கின்றன. ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்துவட நாடர் அருவர் அருவர்என அஞ்சி - வெருவந்து தீத்தீத்தீ என்றுஅயர்வர் சென்னி படைவீரர் போர்க்கலிங்கம் மீதுஎழுந்த போது. (சொல்லணி - 15) இந்நிகழ்ச்சியைக் கலிங்கத்துப்பரணியில் விரிவாகக் காணலாம். பொருளணி இயலில், கருவிக்காரக ஏது அணிக்கு உதாரணமாக, சோழன் கலிங்கநாட்டிலிருந்து பெற்ற யானைக் கூட்டங்களின் சிறப்பை உணர்த்தும் பாடல் காட்டப்பட்டுள்ளது. யானைக் கூட்டம், ‘நேரார் கலிங்கத்து வாளாற் கவர்ந்த வளம்’ என்று புகழ்ப்படுகின்றது: அனபாயன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் சிறந்த தலைநகரமாய் விளங்கிற்று. சோழன் அந் நகரில் தங்கி ஆட்சி புரிந்தான். அந் நகரில் வானளாவிய மாடங்கள் இருந்தன. இச் செய்திகளை எல்லாம், வண்புயலைக் கீழ்ப்படுத்தி, வானத் தருமலைந்து மண்குளிரச் சாயல் வளர்க்குமாம் - தண்கவிகைக் கொங்கார் அலங்கல் அனபாயன் கொய்பொழில்சூழ் கங்கா புரமா ளிகை என்ற வெண்பா உணர்த்துகின்றது. |