இம் மன்னன் காலத்தில், பாண்டியநாடு ஐந்தாகப் பிரிந்து இருந்தது என்றும், பாண்டிய மன்னன் அதனை ஆண்டான் என்றும் தெரிகின்றது. அப் பாண்டிய மன்னன், ... வியன் தமிழ் நா(டு) ஐந்தின் குலங்காவல் கொண்டு ஒழுகும் கோ என்றும் குறிக்கப்படுகின்றான். பலவேறு நாடுகளிலிருந்து சோழ மன்னனுக்குத் திறைப் பொருள்கள் வந்து குவிந்தன (இடமலைவு). இம் மன்னன் காலத்தில் காஞ்சிபுரம் பெருஞ்சிறப்புடன் விளங்கியது. கச்சி என்று அது வழங்கியது. அப் பேரூரின் இரு பக்கமும் இரண்டு ஏரிகள் இருந்தன; நகரைச் சுற்றிலும் சிறந்த மதில் இருந்தது; செழுமையான சோலை நகரில் இருந்தது; திருமாலின் இருப்பிடமாகிய அத்தியூர் அந்நகரின் ஒரு பகுதியாக விளங்கியது; வானத்தில் இருந்து அந் நகரைப் பார்த்தால், ஓர் அழகிய மயில்போல அந்நகர் விளங்கியது; ஏரி இரண்டும் சிறகா எயில்வயிறாக் காருடைய பீலி கடிகாவா - நீர்வண்ணன் அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே போற்றேரான் கச்சிப் பொழில் (பொருளணி இயல் - இயைபு உருவகம்) என்ற பாடல் கச்சியின் சிறப்பை விளக்குகின்றது. கச்சி படுவ கடல்படா கச்சி கடல்படுவ எல்லாம் படும் (உயர்ச்சி வேற்றுமை) என்றும் கச்சி சிறப்பிக்கப்படுகிறது. வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் திருப்பதிகள் திருமாலுக்கு உரியவையாய் கச்சியில் இருந்தன (நிரல் நிறையணி). கச்சியிலுள்ள ஏகாம்பரநாதரையும் சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. அந் நகரில் உள்ள கச்சாலை என்னும் பகுதியில் சிவனை, ‘கச்சாலைக்கனி’ என்று பாடல் புகழ்கின்றது (நிரோட்டம், தன்மையணி). சிதம்பரம், சிறந்த சைவத்தலமாக அக் காலத்திலும் விளங்கியது. தில்லையில் நடமிடும் கூத்தப்பெருமான் தில்லைத் திருநடம்செய்பூந்தாமரை, தில்லைப் பெருமான், அம்பலக் கூத்துடையான் என்றெல்லாம் புகழப்படுகின்றான். |