சோழநாட்டில் உள்ள கருவூர் வஞ்சி என்ற பெயருடனும், திருவண்ணாமலை சோணாசலம் என்ற பெயருடனும் சிறப்புற்று விளங்கின. உரையாசிரியர் தண்டியலங்கார உரையாசிரியர் யார் என்பது விளங்கவில்லை. நூல் தோன்றிய காலத்தை அடுத்து உரையும் தோன்றியிருக்கக்கூடும் என்று கருதுகின்றார் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர். அவர், “தண்டியலங்கார உரைஅனபாய சோழன் காலத்தில் இயற்றப்பட்டது என்று அந்நூலின் உரையிலுள்ள மேற்கோள்களால் தெரிய வருகின்றது. அந் நூலுரையாசிரியர் பெயர் விளங்கவில்லை” என்று கூறுகின்றார்.* ஆனால், தண்டியலங்காரத்தைப் பழைய உரையுடன் பதிப்பித்தவர்கள் அவ்வுரையை இயற்றியவர் சுப்பிரமணிய தேசிகர் என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மைக்கு மாறானதாகும். தண்டியலங்கார உரை பழமையானது என்பதற்குக் சான்றுகள் பல தரலாம். அவ்வாறிருக்க, திருவாவடுதுறை ஆதீனத்தில் பதினான்காம் பட்டத்திற்கு உரியவராய் விளங்கிய சுப்பிரமணிய தேசிகர் உரை எழுதினார் என்பது பொருந்தாது. ஒருகால் பழைய உரையில் நடுவே ஏதேனும் விளக்கக் குறிப்பு எழுதிச் சேர்த்தவர் தேசிகராய் இருக்கலாம். அத்தகைய இடம் எது என்பதை இன்று அறிய இயலவில்லை. உரையின் இயல்பு உரை, சுருக்கமும் தெளிவும் உடையது. சூத்திரங்களின் பொருளை நன்கு விளக்கிச் செல்லுகின்றது. மிகச் சில இடங்களில் அணிகளுக்குள்ள வேறுபாட்டைக் குறிப்பிடுகின்றது. தடை விடை எழுப்பி விளக்குகின்றது. உதாரணச் செய்யுளை அணி இலக்கணத்துடன் பொருத்திக்காட்டி விளக்காமல் செல்லுவது இவ்வுரைக்குள்ள ஒரு குறைபாடாகும். கற்போர் உய்த்து உணர்ந்து தெளிந்து கொள்ளட்டும் என்று இதன் உரையாசிரியர் விட்டிருக்கலாம். பாயிரம் பற்றிய விளக்கம், சிறப்புப் பாயிரம் கூறும் வரலாறு ஆகியவை இல்லாமை பெரிய இழப்பாகும். முதல் நூலும் வழிநூலும் தண்டிலங்காரம் வடமொழியிலுள்ள காவ்யா தர்சத்தின் வழிநூல் என்பதற்கு இதன் உரையே சான்றாக உள்ளது. * சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும். பக்கம் - 161. |