பொதுவணியியலில் (25), “இதன் முதல் நூல் செய்த ஆசிரியர் உலகத்துச் சொல்லைச் எல்லாம் சமஸ்கிருதம், பிராகிருதம், அபப்பிரஞ்சம் என மூன்று வகைப்படுத்தினார். அவற்றுள் சமஸ்கிருதம் புத்தேளிர் (தேவர்) மொழி எனவும் அபப்பிரஞ்சம் இதர சாதிகளாகிய இழிசனர் மொழி எனவும் கூறினார்” என்று உரை குறிப்பிடுகின்றது. சொல்லணியியலின் இறுதியில், “மாலை மாற்றும், சுழிகுளமும், கோமூத்திரியும், சருப்பதோபத்திரமும் என நான்குமே அன்றே ஆண்டு ஆசிரியனால் வடநூலில் உரைக்கப்பட்டன. ஈண்டு உரைத்தன ஆகிய ஒழிந்த மிறைக்கவி, மிகைபடக் கூறிற்றாம் பிற எனின், ஆகா; ஒழிந்தன, ‘ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்’ என்னும் தந்திர உத்தியால் உரைக்கப்பட்டன. அல்லதூஉம், இது வடநூலுக்கு வழிநூல் ஆதலால் தனது விகற்பம்பட உரைத்தார் எனினும் அமையும் என்று இந்நூலின் உரை கூறுகின்றது. நல்ல விளக்கம் உரையில் சில கருத்துகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. அவ்விளக்கங்கள் நம் புலமைக்கு விருந்தாய் அமைகின்றன. பொதுவணி இயலின் இறுதியில், செறிவு என்பதனைப் பின்வருமாறு விளக்குகின்றார்: “மாங்கனியும் தீம்பாலும் வருக்கைச் சுளையும் சருக்கரையும் தம்முள் வேறுபட்ட சுவைய எனினும் கூறுவது மதுரம் ஒன்று அன்றே? அதுபோல, எழுத்துச் செறிவும், சொற் செறிவும், பொருட் செறிவும் செறிவு எனவே சொல்லுவது அல்லது பிறிதொருவகை பேசிற் பெருகிய அகலம் உடைத்தாம் எனக் கொள்க.” பொருளணி இயலில், “இறக்கும் காலத்து உண்டாய நினைவு இறந்த பின்னர் வந்து ஊட்டும் என்பதனால் அறிக” என்ற விளக்கம், வாழ்த்து விலக்கு என்ற உதாரணச் செய்யுளுக்குச் சிறந்த ஒளியூட்டுகின்றது. சத்துவம் என்பதனை இவர் நன்கு விளக்கியுள்ளார்: “சத்துவம் என்பன - வெண் பளிங்கில் செந்நூல் கோத்தால் அதன் செம்மை புறம்பே தோன்றுமாறுபோல, உள்ளம் கருதியது புலனாக்கும் குணங்கள். அவை, சொற்றளர்வு, மெய் வியர்ப்பு, கண்ணீர் நிகழ்ச்சி, மெய் விதிர்ப்பு, மெய் விதும்பல், மெய்ம்மயிர் அரும்பல் முதலியன. சத்துவம் - உள்ளதன் தன்மை”. |