இன்றும் உதவும் இளங்கவிஞர்கள் இன்று பாடும் கவிதைகளில் செய்யும் சிலவகையான பிழைகளை இவ்வுரை, அன்றே சுட்டிக் காட்டியுள்ளது. பொன் தகடு என்பதனை பொற்றகடு என்று எழுதாமல், எதுகை சரியாக அமையவேண்டுமே என்று அப்படியே (பொன் தகடு என்றே) எழுதுவது; குற்றியலுகரத்தின் முன் வரும் உயிர் எழுத்தைச் சேர்த்து எழுதாமல், பாட்டில் சேர்ப்பது போன்ற குறைபாடுகளை இந்நூலின் உரை சுட்டிக் காட்டி அவற்றை நீக்குக என்று அறிவுரை கூறுகின்றது.* சொல்லாட்சி மொட்டு என்ற பெயர்ச்சொல்லிலிருந்து, இவர் வினைச் சொற்களைப் படைத்துக் கொள்கின்றார். குவியும் என்ற பொருளில் மொட்டியா நிற்கும் என்றும், குவிதல் என்ற பொருளில் மொட்டித்தல் என்றும் சொற்களை வழங்குகின்றார் (பொருளணி இயல் யுத்த - ஏது, இயல் - யுத்த ஏது). எங்களுக்கு, நுனக்கு ஆகிய சொற்கள் இவர் காலத்தில் வழூஉச் சொற்களாகக் கருதப்பட்டன. (சொல்லணி இயல் - சொல் வழு). வாழ்க்கை நிலை வாழ்க்கையில் வெறுப்புற்ற மக்கள் தீயில் மூழ்கி இறக்கும் வழக்கம் அக் காலத்தில் இருந்தது. இரவில் வீட்டில் திருடச்செல்லும் கள்வர், வீட்டிலுள்ளோர் விழித்துள்ளனரா, உறங்கி விட்டனரா என்று அறிந்து கொள்ளப் பொய்த்தலை ஒன்றைச் செய்து அதனைக் கோலில் செருகி வீட்டின் உள்ளே நீட்டுவர். பொய்த் தலையைக் கண்டு ஆரவாரம் செய்யாமல் வீட்டிலுள்ளோர் இருப்பாராயின், பின் திருடுவர். கைத்தலம் கண்ணாக் களவுகாண் பான்ஒருவன் பொய்த்தலை முன் நீட்டியற்றும் போந்து என்ற அடிகள் இச்செய்தியை உணர்த்தும். (நகைச்சுவை - உதாரணம்). * பார்க்க: சொல்லணிஇயல் வழுக்களின் வகை (சந்திவழு; யதிவழு). |