5. சாமுண்டி தேவ நாயகர் புறப்பொருள் வெண்பா மாலை தொல்காப்பியத்திற்குப் பின், பெரிதும் பயிலப்படும் புறப்பொருள் இலக்கண நூல். புறப்பொருளின் இலக்கணத்தை உணர்த்தும் தனி நூல் இது. இந்நூலை உரையாசிரியர்கள் அனைவரும் பயின்றுள்ளனர்; தம் உரைகளில் மேற்கோள் காட்டியுள்ளனர். இலக்கணமும் இலக்கியமும்: இந் நூலாசிரியர் ஐயனாரிதனார். சேர அரச பரம்பரையில் தோன்றிய புலமைச் செல்வர். இவர் திணைகளை விளக்கும் சூத்திரங்கள் இயற்றி, துறைகளை விளக்கும் கொளுக்களைச் செய்து, அவற்றிற்கு ஏற்ற இலக்கியங்களையும் தாமே படைத்துள்ளார். பிற நூல்களிலிருந்து மேற்கோள் தராமல் தக்க மேற்கோள்களை இவரே வெண்பாக்களால் பாடிச் சேர்த்துள்ளார். மேற்கோள் காட்டுதல் உரையாசிரியரின் பணி என்றாலும் நூலாசிரியரே அதனைத் திறம்படச் செய்திருக்கின்றார். உரையாசிரியர் செய்ய வேண்டிய பணியை - மேற்கோள் தேடித் தரவேண்டிய பணியை நூலாசிரியரே செய்து உரையாசிரியர்க்குப் பெரிதும் உதவி செய்து விட்டார். உரையாசிரியர் இந்நூலின் உரையாசிரியர் சாமுண்டிதேவ நாயகர். ‘ஐயங்கொண்ட சோழ மண்டலத்து மேற்கானாட்டு மாகறலூர் கிழார்’ என்ற அடைமொழிகள் இவரது பெயரின் முன் சேர்ந்துள்ளன. இவரைப்பற்றிய வரலாறு எதுவும் தெரியவில்லை. இவர் தம் உரையில் (பாடாண் - 42), உலவா வூக்கமொடு உள்ளியது முடிக்கும் புலவர் ஆற்றுப்படை புத்தேட்கும் உரித்தே என்ற பன்னிரு பாட்டியல் (320) சூத்திரத்தை மேற்கோள் காட்டுகின்றார். எனவே இவ்வுரையாசிரியர் 12-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்பது விளங்கும். உரையின் இயல்பு புறப்பொருள் திணையை விளக்கும் சூத்திரம், துறையை விளக்கும் கொளு, மேற்கோள் பாடல்கள் ஆகியவற்றிற்கு இவர் உரை இயற்றியுள்ளார். மேற்கோள் பாடல்களும் நூலாசிரியரால் இயற்றப்பட்டவை ஆதலின், அவற்றிற்கும் இவர் உரை இயற்ற வேண்டியதாயிற்று. மற்ற உரையாசிரியர்கள் (தண்டியலங்கார |