மேற்கோள்) உதாரணப் பாடல்களுக்கு உரை இயற்றவில்லை என்பது இங்கே கருதத் தக்கதாகும். சொல் கிடந்தவாறே இவர் பொழிப்புரையாகப் பொருள் எழுதுகின்றார். எழுவாய் பயனிலை செயப்படுபொருள் தேடி, கொண்டு கூட்டிப் பொருள் எழுதுவதில்லை. வடசொற்கள் மிகுதியாக இவரது உரையில் இடம் பெறுகின்றன. நூலாசிரியர் எவ்வளவுக்கு எவ்வளவு தூய தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகின்றாரோ அப் பண்புக்கு மாறாக உரையாசிரியர் வட சொற்களைக் கொட்டித் தம் உரையை நிரப்பி விடுகின்றார். விசாரித்தல், உபகாரி, உத்திரம், பிராணன் போன்ற வட சொற்கள் இடம் பெறுகின்றன. ‘அப்படிக் கொத்தவன்’ போன்ற பேச்சுமொழிச் சொற்களும் இடம் பெறுகின்றன. உலக வழக்கின் சார்பு இவரது உரையில் உண்டு. மிகச்சில இடங்களில் செய்யுளை முடித்துக்காட்டுகின்றார். இலக்கணக் குறிப்பும், சொற்பொருள் விளக்கமும் அருகியே இடம் பெறுகின்றன. மேற்கோள் மிகுதியாகக் காட்டுவதில்லை. நூலின் பல பகுதிகள் இவ்வுரையால்தான் விளங்குகின்றன. பல அரிய சொற்களுக்கு இவ்வுரைதான் பொருள் கூறுகின்றது. நோலை என்பதற்கு எட்கசிவு என்றும்; நெய்த்தோர் (நெத்துரு - தெலுங்கு) என்பதற்கு உதிரம் என்றும் (வஞ்சி - 5) இவர் பொருள் எழுதுகின்றார். நெடிபடு கானத்து நீள்வேல் மறவர் அடிபடுத்து ஆரதர் செல்வான் - துடிபடுத்து வெட்சி மலைய விரவார் மணிநிரைக் கட்சியுள் காரி கலுழ்ம் (வெட்சி-3) என்ற பாடலில் பல அரிய தமிழ்ச் சொற்கள் உள்ளன. இப்பாடலின் உரை பின்வருமாறு உள்ளது: “சிள் வீடு கறங்கும் காட்டிடத்து நீண்ட வேல்களையுடைய மறவர் காலிலே செருப்பைத் தொட்டு, கடத்தற்கரிய வழியிடத்துச் செல்வான் வேண்டி, துடியைக் கொட்டப் பண்ணி வெட்சிப் பூவைச் சூட, பகைவர் மணியாற் சிறந்த பசுவினையுடைத்தான காட்டிடத்துக் காரி என்னும் புள்ளுத் துந்நிமித்தமாக அழா நிற்கும்”. இவ்வுரை யின்றேல் பாட்டின்பொருள் தெளிவாக விளங்குதல் அரிதாகும். |