பக்கம் எண் :

உரையாசிரியர்கள்62

தீமைகளை-குற்றம் குறைகளை அங்குள்ள சான்றோர்கள் ஆய்ந்து, நல்ல
நூல் என்று ஏற்ற பின்னரே மக்களிடம் அதனைப் பரப்பினர். அதன்பின்னரே
அந் நூலை ஆசிரியர்கள் தம் மாணவர்களுக்குக் கற்பித்தனர்; கற்றோரும்
மற்றோரும் பயின்றனர். இவ்வாறு உயர்ந்த நெறியில் சீரிய நோக்குடன், தமிழ்
இலக்கிய இலக்கண சமய நூல்கள் நாட்டில் உலவி அறிவொளி பரப்பின.

உரை இல்லாத காலம்

    நூல்கள் தோன்றிய காலத்தில் அவை எல்லோருக்கும் விளங்கும்
நிலையில் இருந்தன. உரையும் விளக்கமும் இல்லாத மூல நூல்களே
அனைவரும் கற்று மகிழும் இயல்பினவாய் இருத்தன. பேராசிரியர்
தொல்காப்பிய உரையில், “உரையின்றிச் சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்த
காலமும் உண்டு” (மரபியல்-98) என்றும், “உதாரணங்காட்டல்
வேண்டாமையை உணர்ந்து உரைநடந்த காலமும் உடையவாகும் முற்காலத்து
நூல்கள்” (மரபியல்-101) என்றும் கூறியுள்ள கருத்துக்கள் சிந்திக்கத்தக்கன.

     ‘கற்றலின் கேட்டலே நன்று’ என்பது அக் காலத்தவர் கொள்கை.
கேள்வி என்று தனியாக ஓர் அதிகாரம் வகுத்துக் கொண்டு ‘கற்றலின்
ஆயினும் கேட்க’ என்று திருவள்ளுவர் அறிவுரை கூறுகின்றார். ‘செந்தமிழும்
நாப்பழக்கம்’ என்று ஒளவையார் பாடியுள்ளார். இவை எல்லாம் உரை எழுதி
நூல்களைப் படிப்பதைவிட, ஒருவர் சொல்லக் கேட்டுக் கல்வி பயின்ற
வழக்கம் மிகுதியாய் இருந்ததை உணர்த்தும் சான்றுகள்.

     அக் காலத்து எழுது கருவிகளும், எழுதும்கலை விரைவில் வளரத்
தடையாய் இருந்தன. பனையோலைகளில் எழுத்தாணி கொண்டு ஒரு நூலைப்
பல நாட்கள் எழுதிச் சேர்த்து, சுவடியாக்கிப் போற்றிக்காக்க வேண்டிய நிலை
இருந்து வந்தது. ஒரே சுவடியைப் பலர் கூடிக் கற்றனர். ஒருவர் படிக்க
மற்றவர்கள் காதால் கேட்டு அறிந்தனர். மிகுதியாக எழுதி விளக்க
வேண்டியவற்றை எழுதாமல் வாயால் கூறியே விளக்கி வந்தனர். “விரிப்பின்
பெருகும். விரிவஞ்சி விடுத்தாம். வல்லார் வாய்க் கேட்டுணர்க. வந்தவழிக்
காண்க” என்று உரையாசிரியர்கள் இடையிடையே எழுதிச் செல்லும் வழக்கம்,
அவர்கள் காலத்தில் எழுதுவதில் இருந்த இடர்ப்பாடுகளை உணர்த்தும்.
நூல்களுக்கு உரை எழுதாமல், வாயால் விளக்கிச் செவியால் அறிந்து கல்வி
கற்றுப் புலமை பெறும் வழக்கம் அக் காலத்தில் நாடெங்கும் பரவியிருந்தது.