நாலடியாரில் (அவையறிதல் என்ற அதிகாரத்தில்) சில பாடல்களில் உள்ள, நாப்பாடம் சொல்லி நயம் உணர்வார் -312 பாடமே ஓதிப் பயன் தெரிதல் தேற்றாத மூடர் -316 கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம் -34 என்ற வரிகளும், பழமொழி நானூற்றுப் பாடலில் உள்ள, பல்காலும் நாடுக தான் கண்ட நுட்பத்தை -195 என்ற வரியும் பழங் காலத்து மக்கள் கல்வி பயின்ற முறையை நமக்கு அறிவிக்கின்றன. நன்னூற்பாயிரம், பாடம் சொல்லும் முறையைப் பின் வருமாறு கூறுகின்றது: ஈதல் இயல்பே இயம்பும் காலை, காலமும் இடமும் வாலிதின் நோக்கி, சிறந்துழி இருந்து,தன் தெய்வம் வாழ்த்தி, உரைக்கப் படும்பொருள் உள்ளத்து அமைத்து, விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து, கொள்வோன் கொள்வகை அறிந்து, அவள் உளங்கொளக், கோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப. பாடம் கேட்டும் முறை பின்வருமாறு உரைக்கப்படுகின்றது: நூல்பயில் இயல்பே நுவலின் வழக்குஅறிதல், பாடம் போற்றல், கேட்டவை நினைத்தல், ஆசாற் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல், அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல், வினாதல் வினாயவை விடுத்தல் என்றுஇவை கடனாக் கொளினே மடம்நனி இகக்கும். இவை, கேள்விச் செல்வத்திற்கு இருந்த முதன்மையை உணர்த்துகின்றன. செவிச் செல்வம் பழைய நூலைக் கற்றறிந்தவர் வழி வழியாகப் பிறருக்கு அந்நூலின் நுட்பங்களை எடுத்துக் கூறி வந்தனர். ஆசிரியர் தம் மாணவர்களுக்கு வாய்மொழியாகப் பழைய நூலுக்கு உரையும் விளக்கமும் கூறிவந்தார். இவ்வாறு ஒருநூல், பல தலைமுறைகளைக் கடந்து வரும்போது, ஒவ்வொரு பரம்பரைக்கும் உரிய |