கருத்துகளையும் விளக்கத்தையும் சேர்த்துக் கொண்டு வளர்ந்து வந்தது. வழிவழியாகப் பாடம் சொல்லச் சொல்ல நூல்களுக்குரிய விளக்கம் பெருகியது. பின்வந்தோர், முன்னோர் கருத்துடன் சிலவற்றைக் கூட்டினர்; பொருந்தாதவற்றை மறுத்தனர். ஆசிரியர்கள், பாடங் கூறியபோது தம்மாணவர்கள் எழுப்பிய ஐயங்களைப் போக்கினர்; மாணவர்கள் கேட்ட வினாக்களுக்குத் தக்க விடை கூறினர். இந்த நிலையில், ஆசிரியர்-மாணவர் என்ற சார்பும், தந்தை-மகன் என்ற பிணைப்பும் பெற்று, கற்ற பரம்பரையிடையே செல்வாக்கு அடைந்து உரைகள் வளர்ந்து வந்தன. ஆசிரியர் தம் மாணவர்களுக்கும், தந்தை தம் மக்களுக்கும் தாம் வழிவழியாகக் கேட்டுவந்த உரைகளை மரபு பிறழாமல் எடுத்துக் கூறி விளக்கினர். மாணவன், ஆசிரியர் ஆனான். மகன், தந்தை ஆனான். ஆனபோது முன்னோர் மொழிந்தவற்றைப் பின்னோர்க்கு அவர்கள் எடுத்துரைத்தனர். இவ்வாறு வாழையடி வாழையாக உரைகள் பரவிவந்தன. கேட்போர் நெஞ்சத்தில் நிலை பெற்று, வாய்மொழியாகப் பரவிவந்த உரைகள் பல உண்டு. புலவர்களின் நினைவாற்றலை நம்பி, செவியும் வாயும் செய்த துணையால் வாழ்ந்துவந்த உரைகள் காலப்போக்கில் ஓலைகளில் எழுதப்பட்டன. இறையனார் களவியலுரை இவ்வாறு பல தலைமுறைகள் வாய்மொழியாக வழங்கிவந்தது என்பதை அவ்வுரையே கூறுகின்றது. பின்வரும் உரைப்பகுதி, அவ்வுரை வந்த வரலாற்றை அறிவிக்கின்றது; “மதுரை ஆலவாயிற் பெருமானடிகளால் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரைகண்டு, குமார சுவாமியால் கேட்கப்பட்டது என்க. “இனி உரை நடந்து வந்தவாறு சொல்லுதும்: “மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் கீரங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் தேனூர் கிழார்க்கு உரைத்தார்; அவர் படியங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் மணுலூர் ஆசிரியர் புளியங்காய்ப் பெருஞ் சேந்தனார்க்கு உரைத்தார்; அவர் செல்லூர் ஆசிரியர் ஆண்டைப் பெருங் குமாரனார்க்கு உரைத்தார்; அவர் திருக்குன்றத்து ஆசிரியர்க்கு உரைத்தார்; அவர் மாதவனார் இள நாகனார்க்கு உரைத்தார்; அவர் முசிறி ஆசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார். “இங்ஙனம் வருகின்றது உரை”. இப்பகுதி, உரை வளர்ந்த வரலாற்றை விளக்கும் சிறந்த சான்றாக உள்ளது. |