பக்கம் எண் :

65அறிமுகம்

     நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்குத் தோன்றிய வியாக்கியானங்கள்,
வைணவப் பெரியோர்கள் பொது மக்களிடம், பக்திப் பாடல்களை விளக்கிக்
கூறி நிகழ்த்திய சொற்பொழிவுகளே ஆகும்; ஆசிரியர்-மாணாக்கர் முறையில்
கூறி வந்த விரிவுரைகளே ஆகும். அவற்றைப் பின்னர் எழுதி வைத்துப்
போற்றலாயினர்.

     கம்பராமாயணத்திற்கு விளக்கவுரை, பல நூறு ஆண்டுகளாக
வாய்மொழியாகவே வழங்கி வந்தது என்பதை விநோதரச மஞ்சரி
பின்வருமாறு கூறுகின்றது:

     “கம்பரையும் அவருடைய மாணக்கரையும் அடுத்துப் பல பெயர்கள்
இராமாயணத்திற்குச் சம்பிரதாயமாகவும் சாதுரியமாகவும் உரை
கேட்டார்கள். அப்புறம் அப் பல பெயரையும் அடுத்துப் பற்பலர்
பாடங்கேட்டார்கள். இந்தப் படி, அதன் பின்பும் காலக்கிரமத்தில் அனேகர்
கர்ண பரம்பரையாக இராமாயணத்திற்கு உரைகேட்டு வந்தார்கள்.

     “கொஞ்ச காலத்திற்கு முன்பு அவ்வாறு கர்ண பரம்பரையாகப்
பாடங்கேட்டுக் கிரமமாய்ப் போதிக்கத் தக்க வல்லமை பெற்றிருப்பவர்கள்
ஆர் ஆர் என்னில், தென் தேசத்தில் வசித்திருந்த பெத்த பெருமாள்
பிள்ளை என்பவரும், சீகாழி அருணாசலக்  கவிராயரும், மயிலை சீனிவாசப்
பிள்ளையும், சேதுபதியின் வக்கீலாகிய சோமசுந்தரப் பிள்ளையும், தஞ்சாவூர்
ஸம்ஸ்தான வித்துவான் இராமசாமி கவிராயரும், தொல்காப்பிய வரதப்ப
முதலியாரும், காலேஜ் திருவேங்கடாசல முதலியாரும், திருத்தணிகைச்
சரவணப் பெருமாள் கவிராயரும், புதுவைக்குறள் வேங்கடாசல
உபாத்தியாரும், காஞ்சீபுரம் அருணாசல தேசிகரின் பிதாவாகிய சண்முக
கவிராயரும், திருநீர்மலைக் காளிங்கராய பிள்ளையும் மற்றும் சிற்சிலருமே.

     “இக் காலத்திலும், அப்படிப்பட்ட சாமர்த்தியமுடைய சிலர் சென்னை
ராஜதானி முதலான ஸ்தானங்களில் இருக்கிறார்கள்”*

வாய்மொழியின் செல்வாக்கு

     வாய்மொழி வாயிலாக வளர்ந்து வந்த உரை, ஏட்டில் எழுதப்பட்ட
பின்னரும் உரையாடுவது போன்ற நிலையிலேயே அமைந்தது. ஆசிரியர்
பாடம் கூற, அதைக் கேட்கும் மாணவன் ஐயங்களை எழுப்ப அவற்றிற்கு
விடை கூறி ஆசிரியர் விளக்கும்


* விநோதரச மஞ்சரி (1966) பக். 245.
  வித்துவான் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்.