முறையிலேயே உரைகள் அமைந்தன. நேரே ஏட்டில் உரை எழுதியவர்களும் பழைய மரபைத் தம்மை அறியாமல் மேற்கொண்டனர். வாய்மொழி தன் செல்வாக்கை எழுத்திலும் நிலை நாட்டியது. இறையனார் அகப்பொருள் உரையும், சேனாவரையர் தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு எழுதிய உரையும், பேராசிரியர் திருக்கோவையாருக்கு எழுதிய உரையும், காலிங்கர் திருக்குறளுக்கு எழுதிய உரையும் ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் கூறும் வகையில் வினா விடையாக உள்ளன. மற்ற உரையாசிரியர்களின் உரையிலும் ஆங்காங்கே பல இடங்கள் இவ்வாறு அமைந்துள்ளன. பேராசிரியர், திருக்கோவையாருக்கு (285) எழுதிய உரையிலிருந்து ஓர் எடுத்துக்காட்டுக் காண்போம்: “கட்டுவித்தியை வினவ, அவள் அறியாதாள் போலக் இக்கருமம் முடித்தற் பொருட்டு இவ்வகை சொன்னாள். என்னை? வரை பொருட்குத் தலைமகன் போக அவன் வரவு நீட்டித்தலான், இவளது ஆற்றாமையான் உண்டாகிய நோயை முருகனால் வந்தது என்று இவள் கூறலாமே? இஃது அங்ஙனம் ஆயின், குறி என்பது அனைத்தும் பொய்யேயாம் என்பது கடா. அதற்கு விடை: குறியும் பொய்யன்று; இவளும் பொய் கூறினாள் அல்லள்; அஃது எங்ஙனம் எனின், குறிபார்க்கச் சென்றிருக்கும் பொழுதே தெய்வ முன்னிலையாகக் கொண்டு இருத்தலான், அத் தெய்வத்தின் வெளிப்பாட்டானே தலைமகனுடன் புணர்ச்சி உண்மையை அறிந்தாள். இங்ஙனம் அறிந்தாள் என்பதனை நாம் அறிந்தவாறு யாதினால் எனின், இக் களவொழுக்கம் தெய்வம் இடை நிற்ப, பான்மை வழியோடி நடக்கும் ஒழுக்கம் ஆதலானும், சிற்றம்பலத்தான் இயல்பு தெரிந்திராதே என்று இவள் சொல்லுதலானும் அறிந்தாம்.” இப் பகுதி, வினாவிடை முறையில் - ஆசிரியர் தம் மாணவர்களுக்குப் பாடங்கூறும் வகையில் அமைந்துள்ளது. உரையாடல் வகையில் இதனை அமைப்போம்: ஆசிரியர்: கட்டுவித்தியை வினவ, அவள் அறியாதாள் போல இக்கருமம் முடித்தற் பொருட்டு இவ்வகை சொன்னாள். மாணவர்: என்னை? வரை பொருட்குத் தலைமகன் போக அவன் வரவு நீட்டித்தலான் இவளது ஆற்றாமையான் உண்டாகிய நோயை முருகனால் வந்தது என்று இவள் கூறலாமோ ? இஃது அங்ஙனம் ஆயின், குறி என்பது அனைத்தும் பொய்யேயாம். |