பக்கம் எண் :

67அறிமுகம்

ஆசிரியர்: குறியும் பொய்யன்று; இவளும் பொய் கூறினாள் அல்லள்.

மாணவர்: அஃது எங்ஙனம்?

ஆசிரியர்: குறிபார்க்கச் சென்றிருக்கும் பொழுதே, தெய்வ முன்னிலையாகக்
          கொண்டு இருத்தலான், அத் தெய்வத்தின் வெளிப்பாட்டானே
          தலைமகனுடன் புணர்ச்சி உண்மையை அறிந்தாள்.

மாணவர்: இங்ஙனம் அறிந்தாள் என்பதனை நாம் அறிந்தவாறு யாதினால்?

ஆசிரியர்: இக் களவொழுக்கம், தெய்வம் இடை நிற்பப் பான்மை வழியோடி
          நடக்கும் ஒழுக்கம் ஆதலானும், சிற்றம்பலத்தான் இயல்பு
          தெரிந்திராதே என்று இவள் சொல்லுதலானும் அறிந்தாம்.

     இவ்வாறு, உரையாடலாய் அமையத்தகுந்த பல பகுதிகள் இறையானர்
களவியல் உரையிலும், மற்ற உரைகளிலும் உள்ளன.

     உரை, கட்டுரை ஆகிய சொற்களே அவை முதலில் வாய் மொழியாக
வழங்கி வந்தவை என்பதை நினைவூட்டுகின்றன. உரையாசிரியர்கள், “இச்
சூத்திரம் என்நுதலிற்றோ எனின், முன்னர்க் கூறினாம், பின்னர்க் கூறுதும்,
எனின் அற்றன்று, நன்று சொன்னாய், அறியாது கடாயினாய், கூறுதும், என்று
கூறுவாரும் உளர், வல்லார்வாய்க் கேட்டுணர்க” என்று இடையிடையே தம்
உரையில் எழுதிச் செல்லுகின்றனர். என்பது, என்க, என்றவாறு, எனப்படுவது,
அறிக, கொள்க, கருதுக, கூறுக போன்ற சொற்களும் அவர்காளல்
ஆளப்படுகின்றன. இன்று கட்டுரை எழுதுவோரும் ஏன் என்றால், எப்படி
எனில், ஏன் என்று கேட்டால், விளக்கமாகக் கூறினால் என்று எழுதிப்
பழைய மரபின் செல்வாக்கை நினைவூட்டி வருகின்றனர்.

உரையின் வளர்ச்சி

    வழிவழியாக நூல்களுக்கு உரைகேட்டுப் பழகியவர்களும் தொடக்கத்தில்
விரிவான உரையோ விளக்கமோ எழுதவில்லை. முதன்முதலில்
அருஞ்சொற்களுக்குப் பொருளும், சொற்களைக் கொண்டுகூட்டி முடிக்கும்
வகையும், சில வரலாற்றுக் குறிப்பும் மிகச் சுருக்கமாய் எழுதி வைத்தனர்.
சிலப்பதிகாரத்திற்கு முதலில் அரும்பதவுரை தோன்றியது. ஐங்குறு நூறு,
பதிற்றுப் பத்துப் போன்ற பழந்தமிழ் நூல்களுக்கு முற்காலத்தில் தோன்றிய
பழைய உரைகள் மிகச் சுருக்கமாக-குறிப்புரையாக உள்ளன. புறநானூற்றின்
பழையவுரை பொழிப்புரையாக உள்ளது. பரிபாடலுக்குப்