பக்கம் எண் :

உரையாசிரியர்கள்626

    1878-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வ.ச. வைத்தியலிங்கப் பிள்ளை
அகப்பொருள் விளக்கத்திற்கு ஓர் உரை இயற்றி மேற்கோள் பாடல்களைத்
தஞ்சைவாணன் கோவையிலிருந்து  தந்தார். இந்தப் புது உரைக்குப்பின்,
பழையவுரையிலும் அக்கோவைப் பாடல்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

     சுன்னாகம் அ. குமார சுவாமிப் பிள்ளை திருக்கோண மலை
த. கனகசுந்தரம் பிள்ளை அகப்பொருள் விளக்கத்திற்கு உரை கண்டுள்ளனர்.

சொற் பொருள் விளக்கம்

    சில சொற்களுக்கு நாற்கவிராசநம்பி கூறும் பொருள் கீழே
தரப்படுகின்றன:

     “நூல் என்ற சொற்குப் பொருள் உரைக்குங்கால், தந்திரம் என்னும்
வடமொழியை நூல் என்று வழங்குவது தமிழ் வழக்கு எனக்கொள்க” (1)

     “உரன் எனினும் அறிவு எனினும் ஒக்கும். பெருமை என்பது பழியும்
பாவமும் அஞ்சுதல். அறிவு என்பது தக்கது அறிதல். அச்சம் என்பது
காணாதது ஒன்று கண்டாற்பெண்டிரிடத்து நிகழ்வது. நாணம் என்பது
பெண்டிர்க்கு இயல்பாகிய குணம். மடம் என்பது பேதைமை எனக்கொள்க
(247)”.

     “அல்ல குறி என்பது குறியல்ல என்றவாறு. அதனை முன்றில்போலக்
கொள்க (159)”.

     “கோவலன் என்பது கோபாலன் என்னும் வடமொழித் திரிபால், ஆப்
புரத்தல் தொழில்மேல் நின்றது” (247).

7. தமிழ்நெறி விளக்கவுரை 

    தமிழ்நெறி விளக்கம் என்பது, முன்னும் பின்னும் சிதைந்து
அரைகுறையாகக் கிடைத்த நூல், இதனைப் பதிப்பித்தவர் டாக்டர் உ.வே.
சாமிநாத ஐயர். அவர் பதிப்பித்த நூலில் அகப் பொருளைப்பற்றிக் கூறும்
25 சூத்திரங்களே உள்ளன.

     பொருளியல் என்ற பகுதியின் முதற் சூத்திர உரையில், ‘நிறுத்த
முறையான் பொருளிலக்கணம் ஆமாறு உணர்த்தல் நுதலிற்று’ என்று
இருப்பதால் இதற்கு முன் எழுத்தும் சொல்லும் கூறும் பகுதியும்,
பொருளியலில் புறப் பொருளும், அதற்குப்பின் யாப்பு அணி பற்றிய
பகுதியும் இருந்திருக்கலாம்.