பக்கம் எண் :

627ஆய்வு

     நூலாசிரியர் பெயரும் உரையாசிரியர் பெயரும் தெரியவில்லை.
நூலாசிரியரே எழுதியிருக்கலாம் என்பதற்குச் சான்று உண்டு. உரையின்
எப்பகுதியிலும், என்றார் நூலாசிரியர் என்றோ, நூலாசிரியர் கருத்து
இது என்றோ கூறாமல் உரை செல்லுகின்றது. களவியற் காரிகையின்
உரையாசிரியர், ‘தமிழ் நெறி விளக்கத்தில் பொருளியலுடையாரும்
களவொழுக்கம் ஆறு வகைப்படும் என்றார்’ என்று இந்நூலை மேற்கோள்
காட்டுகின்றார். ‘முக்கண் கூட்டம்’ (21) என்ற சூத்திரத்தின் மூலமும் உரையும்
இந்நூலில் உள்ளபடியே அவரால்  மேற்கோள் காட்டப்படுகின்றன. ஆதலின்
‘தமிழ் நெறி விளக்கம்’ இயற்றிய ஆசிரியரே உரையும் இயற்றி இருக்கலாம்.

     இந்நூலின் உரையில் மேற்கோளாகக் காட்டப் பெறும் பாடல்களில்
சில, களவியற் காரிகை உரையில் உள்ளன. பரிமேலழகர் காமத்துப்பாலில்
குறிப்பிடும் ஆயிடைப் பிரிவு, சேயிடைப் பிரிவு ஆகிய இரண்டும் இந்நூலில்
கூறப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நெறி விளக்கம் களவியற் காரிகை
ஆசிரியர்க்கும் பரிமேலழகர்க்கும் முன்னரே தோன்றியது என்னலாம்.

     உரைமேற்கோளாக வரும் பாடல்களில் (6, 32, 52 ஆம் பாடல்கள்)
‘வழுத்தூர் மதிதரன்’ என்பவரைப் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன.

    தூய்மை சான்ற தொல்குடித் தோன்றிய
    வாய்மை நாவின் மதிதரன்    
                                   (மேற். பாடல்-33)

    மண்மிசை விளங்கிய வழுத்தூர் மதிதரன்
    நுண்ணியற் பனுவல் நுழைபொருள் நுனித்த
    வாய்மொழி அமிர்தம்
                                   (மேற். பாடல்-62)

என்ற பகுதிகள் குறிப்பிடத்தக்கவை.

     மதிதரன் என்பவர், நூல் இயற்றியவர்க்குக் கல்வி புகட்டிய
ஆசிரியராக இருக்கலாம். மதிதரன் என்பது சிவபெருமான் திருநாமங்களில்
ஒன்று. ஆதலின் ஆசிரியரும் மாணவரும் சைவசமயத்தவராக இருக்கக்கூடும்.

     வழுத்தூர் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐயம்பேட்டைக்கு
வடக்கே குடமுருட்டியாற்றின் தென்கரையில் உள்ளது.