உரையின் இயல்பு உரை மிகவும் சுருக்கமாய் - எளிமையாய் உள்ளது. மகுணன் (மகிழ்நன்) குறுஞ்சி (குறிஞ்சி) போன்ற மரூஉச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. இலக்கணச் செறிவோ நடையழகோ உரையில் இல்லை. ஒருமை பன்மை மயக்கத்திற்கு மேற்கோளாகக் காட்டப் பெறும் ‘ஏவல் இளையர் தாய் வயிறு கரிக்கும்’ என்ற அடி இவ்வுரையில் ஓர் பாடலில் இடம் பெறுகின்றது. நிரையிர் செல்லு மோஎன நேர்ந்து புலையன் எறிந்த பூசல் தண்ணுமை ஏவல் இளையர் தாய்வயிறு கரிக்கும் இன்னா அருஞ்சுரம் என்ப என்னோ தோழி அவர்சென்ற ஆறே. (மேற். பாடல்-154) 8. களவியற் காரிகை உரை உரையின் இயல்புகள் களவியற் காரிகை, அகப்பொருள் உணர்த்தும் இலக்கண நூல். முன்னும் பின்னும் சிதைந்து அரைகுறையாகக் கிடைத்த தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்று. இதற்கு உரையும் உள்ளது. இந்த நூலின் பெயரோ, இயற்றியவர் பெயரோ, உரையாசிரியர் பெயரோ தெரியவில்லை. இந்நூலின் சில பகுதிகளை ஒன்று சேர்ந்து வெளியிட்ட ஆராய்ச்சி அறிஞர் ச.வையாபுரிப் பிள்ளை, இந் நூலுக்குக் ‘களவியற் காரிகை’ என்று பெயரிட்டார். அவர் 1931-இல் இந்நூலையும் உரையையும் செப்பனிட்டு வெளியிட்டார். சிதைந்து போனவை போகக் கிடைத்த துண்டுதுணுக்குகளை எல்லாம் ஒன்று சேர்ந்து இயைபு நோக்கி அமைத்து நூலாக்கி, பொருத்தமான பெயரும் இட்டு வெளிப்படுத்திய அறிஞரின் முயற்சியையும் திறனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெயர்ப் பொருத்தம்: ‘களவியற் காரிகை’ இறையனார் களவியலைத் தழுவி எழுதப்பட்ட நூல். இறையனார் களவியலில் நூற்பாவால் ஆகிய அறுபது சூத்திரங்கள் இருக்கின்றன. அந் நூலைத் தழுவி எழுதப்பட்ட களவியற் காரிகையில் கட்டளைக் கலித்துறையால் ஆன அறுபது செய்யுள்கள் உள்ளன. நூற்பாவால் அமைந்த யாப்பருங்கலம் என்னும் நூலை ஒட்டி, கட்டளைக் |