பக்கம் எண் :

629ஆய்வு

கலித்துறையால் எழுதப்பட்ட யாப்பிலக்கண நூல் யாப்பருங்கலக் காரிகை
என்று பெயர் பெற்றதுபோல, நூற்பாவால் ஆகிய களவியலைத் தழுவிக்
கட்டளைக் கலித்துறையால் ஆன நூல் களவியற்காரிகை என்று பெயர்
பெற்றது.

     களவியற் காரிகையின் தொடக்கத்தில் பத்துச் செய்யுளும் இறுதியில்
ஆறு செய்யுளும் மறைந்துபோயின. இப்போது 11 முதல் 54 வரையில் உள்ள
கட்டளைக்கலித்துறைகள் அந்தாதியாக அமைந்துள்ளன.

     இதன் உரையாசிரியர் யார் என்று தெரியவில்லை. உரையில்
மிகுதியான விளக்கங்கள் இன்மையால் உரையாசிரியரைப்பற்றி அறிய வாய்ப்பு
இல்லை. உரையின் தொடக்கத்தில் உள்ள ஆசிரிய விருத்தம், நெல்வேலி
வேய்முத்தரை வணங்குவதாய் அமைந்துள்ளது. ஆதலின் இவரைத்
திருநெல்வேலியில் வாழ்ந்த சைவர் என்னலாம். காட்சி என்ற துறையை
விளக்கும்போது இவ்வுரையாசிரியர் இறையனார் களவியல் உரையிலிருந்து
பல வரிகளை அப்படியே எடுத்து எழுதி இருக்கின்றார். எனவே, இவர்
அவ்வுரையை விரும்பிப்பயின்று அதில் ஆழ்ந்தவர் என்னலாம்.
திருவரங்கத்துத் திருமாலைப் போற்றும் கோயிலந்தாதியிலிருந்து சில
பாடல்களை மேற்கோள்தந்து தம் சமயப் பொதுநோக்கைக் காட்டுகின்றார்.

      காலம்: இவ்வுரையாசிரியர் கண்டனலங்காரம் என்னும் நூலிலிருந்து
மேற்கோள் தருகின்றார். கண்டன் அலங்காரம் சோழ மன்னனை, “பொன்னி
நாட்டுமன்னன் கண்டன் பூபால தீபன்” என்று புகழ்கின்றது. இரண்டாம்
இராசராசனுக்குக் கண்டன் என்றபெயர் உண்டு. இம் மன்னன் 1146 முதல்
1163 வரை அரசாண்டவன்.

     இவ்வுரையாசிரியர் பல் சந்த மாலை என்ற நூலிலிருந்து மேற்கோள்
தருகின்றார். இந் நூலில் வின்னன் என்ற முகம் மதிய சிற்றரசனைப் பற்றிய
குறிப்புகள் வருகின்றன. முகம்மதியர் தென்னாட்டின்மீது படையெடுத்து
மதுரையைக் கைப்பற்றியது 1310 முதல் 1325க்கு இடைப்பட்ட காலத்திலாகும்.
முகம்மதிய மரபில் வந்த வின்னன் பாண்டிய நாட்டுக் கீழ்க்கடற்கரையில்
இருக்கும் வகுதாபுரி என்னும் காயல்பட்டினத்தில் வசித்தான் என்றும்
பல் சந்தமாலை அவனைப்பற்றிய நூல் என்றும் கூறுவர். வின்னன்
வெளிநாட்டவன் ஆதலின் யவனராசன் என்று குறிப்பிடப்படுகின்றான். இவன்
அஞ்சு வன்னத்தவர் குலத்தைச் சேர்ந்தவன்; கலிபாமரபில் தோன்றியவன்.
ஆகையால் கலுபதி என்றும் அழைக்கப்பட்டான். இவனது காலம் 1325க்குப்
பின்னர் ஆகும்.