பக்கம் எண் :

உரையாசிரியர்கள்630

     எனவே, உரையாசிரியர் பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
வாழ்ந்தவர் என்னலாம்.

     இவர், தமிழ்நெறி விளக்கத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

     மேற்கோள் நூல்கள்: இவ்வுரையாசிரியர் முப்பதுக்கு மேற்பட்ட
நூல்களைத் தம் உரையில் காட்டியுள்ளார். பெரும்பாலான நூல்கள்
இன்று கிடைக்காதவை. அகத்திணை, அரையர் கோவை, இன்னிசைமாலை,
ஐந்திணை, கண்டனலங்காரம், கிளவித்தெளிவு, கிளவி மாலை, கிளவி
விளக்கம், கோயிலந்தாதி, சிறப்பட்டகம், திணைமொழி, தில்லையந்தாதி,
நரையூரந்தாதி, பல்சந்த மாலை, மழவை எழுபது, வங்கர் கோவை என்பன
மறைந்துபோன தமிழ் நூல்கள். இவ்வுரையால் இந்நூல்களிலிருந்து பல
செய்யுள்கள் கிடைக்கின்றன. தமிழ் நூல்களின் பெரும் பரப்புத் தெரிகின்றது.
உரையாசிரியரின் நூலறிவு வெளிப்படுகின்றது.

     பல இடங்களில் களவியலுரையைப் பெயர்த்து எழுதிச் செல்கின்றார்.

இல்லாத பாடல்கள்

    ‘பையுள் மாலை’ என்ற செய்யுளை மேற்கோள் காட்டி, அது
நெடுந்தொகையுள் உள்ளதாய்க் குறிப்பிடுகின்றார்.

     ‘ஆரணங்குற்றனை’ என்ற பாடல் குறுந்தொகையுள் இருப்பதாய்க் கூறி,
மேற்கோள் தருகின்றார். இவை இரண்டும் இன்றைய பதிப்புக்களில்
அத்தொகை நூல்களில் இல்லை.

9. நேமிநாத உரை

     நேமிநாதம் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திரிபுவனதேவன்
என்னும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (1178-1219) இயற்றப்பட்ட
இலக்கண நூல். இது நன்னூலுக்கு முற்பட்டது. வெண்பாக்களால் ஆனது:
எழுத்து சொல் ஆகிய இரண்டின் இலக்கணத்தைச் சுருக்கமாக உரைப்பது;
சின்னூல் என்னும் வேறு பெயரை உடையது.

     இதில் பாயிரம் 1, அவையடக்கம் 1, எழுத்ததிகாரம் 24, சொல்லதிகாரம்
71 ஆக 97 வெண்பாக்கள் அடங்கியுள்ளன.

     இதனை இயற்றியவர் குணவீர பண்டிதர் என்னும் சமணப் புலவர்.
நேமிநாதர் என்னும் 22-ஆம் சைன தீர்த்தாங்கரர்