பெயரால் இந்நூலை இயற்றி, இந் நூலுக்கு நேமிநாதம் என்று பெயரிட்டார். உரையாசிரியர் இந்நூலுக்குப் பழைய உரை உள்ளது. இவ்வுரையாசிரியரின் ஊர், பெயர் எதுவும் தெரியவில்லை. ஆனால், இவர் சமண சமயத்தவர் என்பதற்கு உரையில் சில சான்றுகள் உள்ளன. அருகன் (10) முக்குடை பல்லவத்தின் சந்தம் (16) ஆகிய சொற்களை எடுத்துக்காட்டியுள்ளார். காலம்: இவர், எண் ஓகாரத்திற்கு (79), ‘முத்தன் என்கோமூர்த்தி என்கோ’ என்னும் பாடலைக் காட்டி அதன் கீழ், ‘என்றார் அவிரோதி யாழ்வார்’ என்று கூறுகின்றார். இப்பாடல் அவிரோதியாழ்வார் (அவிரோத நாதர்) என்னும் சமணப் புலவர் இயற்றிய திருநூற்றந்தாதி என்னும் நூலில் (31) உள்ளது. அவிரோதியாழ்வார் காலம் 14ஆம் நூற்றாண்டு ஆகும்.* ஆதலின் நேமிநாதவுரையாசிரியர் 14-ஆம் நூற்றாண்டிலோ அதற்குப் பின்னரோ வாழ்ந்தவர் என்னலாம். உரையின் இயல்பு இவ்வுரை, சூத்திரங்களுக்குத் தெளிவான பொழிப்புரையுடன் அமைந்து, தக்க எடுத்துக் காட்டுகளுடன் வினாவிடைகள் பொருந்தி, தேவையான இடங்களில் விரிவுரையோடு விளங்குகின்றது. இவ்வுரையில் நீளமான வாக்கியத்தையோ கடினமான ஆராய்ச்சியையோ காண இயலாது. எளிமையான சின்னஞ்சிறு வாக்கியங்கள் நூல் முழுவதும் அமைந்து இன்பமூட்டுகின்றன. சிறிதளவு தமிழ்ப் பயிற்சியுடையவரும், எளிமையாக இலக்கணம் கற்க விரும்புவோரும் இதனைப் படித்துப் பயன் பெறலாம். பிறர் கருத்தை மறுப்பதோ, முரண்பட்ட கருத்தை எடுத்துக் காட்டுவதோ இவ்வுரையில் இல்லை. இவ்வுரையாசிரியர் சமணராயினும், சமயக்காழ்ப்புச் சிறிதும் இன்றி, பிற சமய நூல்களையும் கொள்கைகளையும் ஆங்காங்கே எடுத்துக்காட்டுகின்றார். தொல்காப்பியத்திலிருந்து தொடர்ச்சியாய்ப் பல சூத்திரங்களை (6, 54 வெண்பாக்களின் கீழ்) எடுத்துத் தந்து, “இவைகளை விரித்துக் கொள்க” என்று எழுதிச் செல்கின்றார். * கலைக்களஞ்சியம் 1, பக்-236. |