திருவள்ளுவ மாலையில் (21) உள்ள, உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான் என்ற செய்யுளை மேற்கோள் காட்டி (30), அதன்கீழ், உபகேசி ஆவாள் நப்பின்னைப் பிராட்டியார்” என்று எழுதும் விளக்கம், புதிய ஒளி தருகின்றது. இவ் விளக்கத்தால் அப்பாடல் தெளிவு பெறுகின்றது. கீழ்வரும் உரைப்பகுதிகள் , இவ்வுரையாசிரியரின் எளிய இனிய தெளிவான நடைக்குச் சான்று பகரவல்லவை: “அரைக் கழஞ்சு என்புழி முன்மொழியிற் பொருள் நின்றது; வேங்கைப் பூ என்புழிப் பின்மொழியிற் பொருள் நின்றது; தூணிப் பதக்கு என்புழி இரு மொழியிலும் பொருள் நின்றது. பொற்றொடி என்புழி இரு மொழியினும் பொருள் இன்றி இவற்றை உடையாள் என்னும் வேறொரு மொழியிலே பொருள் நின்றது” (1). “பவளக் கோட்டு நீல யானை சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லை. அம்மிப் பிந்தும் துன்னூசிக் குடரும் சக்கரவர்த்திக் கோயிலுள்ளும் இல்லை!” (36) உவமைகள்: “வல்லினம் கல்மேல் விரல் இட்டாற்போலவும், மெல்லினம் மணல் மேல் விரல் இட்டாற்போலவும், இடையினம் மண்மேல் விரல் இட்டாற்போலவும், இடையினம் மண்மேல் விரல் இட்டாற்போலவும் கொள்க” (2). “வாளும் கூடும் இருப்பின் வாளைக் கொடுவா என்னும் அத்துணை அல்லது கூட்டைக் கொடுவா என்பது இல்லை ஆதலின் இங்ஙனம் சொல்லப்பட்டது” (8) 10. பாட்டியல் உரைகள் தொல்காப்பியர் காலத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுதிகளாகத் தமிழ் மொழியின் இலக்கணம் ஆராயப்பட்டது. காலப்போக்கில் பொருள்இலக்கணம் பலவாறாகப் பிரிந்து வளர்ச்சி பெற்றது. அகம், புறம், யாப்பு, அணி என்று பிரிந்து வளர்ந்தன. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப்பின் ‘பாட்டியல்’ என்று ஓர் இலக்கணம் பிரிந்து வளர்ந்தது. பாட்டியல் என்பது ஒருவகை யாப்பிலக்கண ஆராய்ச்சியேயாகும். பாட்டியல் கூறும் செய்திகளை இரு பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம். ஒன்று, பாட்டில் அமைந்திருக்க வேண்டிய |