பொருத்தங்கள்; மற்றொன்று இலக்கிய வகைகளைப் பற்றிக் கூறும் இலக்கணங்கள். தமிழில் கணக்கற்ற பாட்டியல் நூல்கள் தோன்றின. அவற்றுள் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், வரையறுத்தப் பாட்டியல் என்ற ஐந்துமே இன்று பயிலப்பட்டு வருகின்றன. பாட்டியல் உரைகளிலும், ஏனைய இலக்கண நூல் உரைகளிலும் பல பாட்டியல் நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. சூத்திரங்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. அகத்தியர் பாட்டியல், பண்டாரப் பாட்டியல், வருணப் பாட்டியல், பாட்டியல் மரபு, தத்தாத்திரேயப் பாட்டியல், தொல்காப்பியர் பாட்டியல், பரணர் பாட்டியல், கல்லாடர் பாட்டியல் என்பன போன்ற பல பாட்டியல் நூல்களின் பெயரும் சூத்திரங்களும் உரையாசிரியர்களால் கூறப்படுகின்றன. இலக்கண விளக்கம் நூலில் பொருளதிகாரத்தின் ஐந்தாம் இயலாகப் பாட்டியல் உள்ளது. அதனை இயற்றியவர் இலக்கண விளக்கத்தின் ஆசிரியர் அல்லர். அந்நூலாசிரியரின் மகனே அதனை இயற்றியுள்ளார். அதனையும் தனிப் பாட்டியல் நூலாகவே கருத வேண்டும். அதற்கு ‘இலக்கண விளக்கப் பாட்டியல்’ என்று பெயரிடலாம். பாட்டியல் உரைகள் பாட்டியல் நூல்களுள் பன்னிரு பாட்டியலுக்குப் பழையவுரை இல்லை. இலக்கண விளக்கப் பாட்டியலுக்கு நூலின் ஆசிரியரே உரை இயற்றியுள்ளார். ஏனையவற்றிற்குப் பழைய வுரைகள் உள்ளன. அவற்றை இயற்றியவர் வரலாறு எதுவும் தெரியவில்லை. பாட்டியல் நூல்களுள் காலத்தால் முற்பட்டது பன்னிரு பாட்டியலாகும். இதற்கு கா. ரா. கோவிந்தராச முதலியார் விளக்கவுரை எழுதி, முன்னுரையில் நூலைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். |