வெண்பாப் பாட்டியல் - பழையவுரை வெண்பாப் பாட்டியலுக்கு வச்சணந்திமாலை என்று பெயரும் உண்டு. இந் நூலைச் செய்வித்தவர் வச்சணந்தித் தேவர். இதற்குப் பழையவுரை உள்ளது. செய்யுளியல் உரையில் (45) இவ்வுரையாசிரியர், ‘கந்த புராணம், கூர்மபுராணம் என்பன பாடப்படும் பொருள்பற்றி வந்தன’ என்கின்றார். ஆதலின் இவர் அவ்விரு நூலாசிரியர்களுக்கும் பிற்பட்டவர் என்னலாம். உரையில் தெளிவும் எளிமையும் உண்டு. தேவையான அளவு சுவையான பாடல்களை மேற்கோள் தருகின்றார். இவ்வுரையாசிரியர், செய்யுளியல் உரையில் (செய்-3) மதுர கவிக்கு உதாரணமாக, பூமகளும் நல்வாழ்வு பெற்றாள் புரைதீர்ந்த நாமகளும் பல்கலையும் நண்ணினாள் - தோமகல்சீர் வையம் புகழ்களந்தை வச்சணந்தி மாமுனிகள் செய்ய பதகமலஞ் சேர்ந்து என்ற வெண்பாவைக் காட்டுகின்றார். பாயிரவுரை மிகவிரிவாக உள்ளது. நூலை இயற்றியவர் குணவீரபண்டிதர் என்றும், இந்நூல் வச்சணந்தித் தேவன் செய்வித்ததால் வச்சணந்திமாலை என்று பெயர் பெற்றது என்றும், இந்நூல் திரிபுவன தேவன் என்னும் மன்னன் காலத்தில் இயற்றப்பட்டது என்றும் உரையாசிரியர் கூறுகின்றார். கற்பிக்கப்படும் நன்மாணாக்கர் இயல்புகளுக்கு இவர் சில புதிய எடுத்துக்காட்டுகள் தருகின்றார். எந்நிறத்தையும் ஏற்கும் வெண்ணிறம், கூட்டமாய்த் தம்மைக் காத்துக்கொள்ளும் யானை, ஒலியை உற்றுக்கேட்டு உணரும் ஆனேறு ஆகியவற்றை நன்மாணாக்கர்க்கு உவமை கூறுகின்றார். நெய்யரியை நன்மாணக்கர்களுக்கு உவமை கூறித் திறம்பட விளக்குகின்றார். நல்லவை அகத்திட்டு நவைபுறத் திடுவது நெய்யரி மாண்பென நினைத்தல் வேண்டும் என்பது, இவர் தரும் புதிய விளக்கம். இவ்வுரையின் எளிமைக்கு ஓர் உதாரணம் காண்போம்: ஆரொருவன் பாக்களை ஆங்கொருவ னுக்களிப்போன் சோரகவி; சார்ந்தொலியிற் சொல்லுமவன் - சீரிலாப் பிள்ளைக் கவி; சிறந்த பின்மொழிக்காம் புன்மொழிக்காம் வெள்ளைக் கவிஇவனின் வேறு. -செய்யுளியல்-48 |