உரை ஒருவன் பாட்டை மற்றொருவனுக்குக் கொடுப்போன் கள்ளக் கவியாம்; ஒருவன் கவி இசையில் வேறொரு செய்யுள் புணர்ப்போன் சார்த்துக் கவியாம்; தனக்கென ஒன்றின்றி முன்னோர் மொழிந்த சொன்னடை பொருள் நடை கண்டு கவிபாடுவோன் பிள்ளைக் கவியாம்; புன் மொழிகளால் ஒன்ற கவிபாடுவோன் வெள்ளைக் கவியாம். நவநீதப்பாட்டியல் நவநீதன் என்பவர் இயற்றிய பாட்டியல் நவநீதப் பாட்டியல் எனப்பட்டது. இந் நூலின் இறுதிப்பாடல் ஆக்கியோனைப்பற்றிச் சில செய்திகளைக் கூறுகின்றது. ‘ஈட்டிய எண்ணெண்’ என்று தொடங்கும் அப் பாடல் (102) நூலாசிரியரை, நாட்டிய வேதத்தவன் ‘நவ நாட்டு நவநீதன்’ என்றும், ‘குறுமுனியாதிக் கலைஞர் கண்ட பாட்டியல் ஆனவை எல்லாம் தொகுத்தான்’ என்றும் கூறுகின்றது. இந்நூலின் முதற் செய்யுளில், “கமலக் கண்ணன் பார் கொண்ட பாதத்தை ஏத்திப் பகருவன் பாட்டியலை” என்று இவர் கூறுவதால் இவரை வைணவர் என்று கருதலாம். நவநீதப் பாட்டியல், பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய வெண்பாப் பாட்டியலுக்குப்பின் தோன்றியது என்பர். இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றும் உள்ளது. நூலினையும் உரையினையும் நன்கு ஆராய்ந்து வெளியிட்ட ச. வையாபுரிப் பிள்ளை இந் நூலின் உரைமிகப் பழையது என்றும் இயற்றியவர் யார் என்று தெரியவில்லை என்றும் கூறுகின்றார். பழையவுரை நூலின் கருத்தை அறியப் பெரிதும் உதவுகின்றது. நவநீதப் பாட்டியலுக்கு மு.சண்முக பிள்ளை புதிய உரை இயற்றியுள்ளார். சிதம்பரப் பாட்டியல் சிதம்பரப் பாட்டியலை இயற்றியவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதியார். இதற்குப் பழைய உரை உள்ளது. இவ்வுரை நூல் முழுமைக்கும் இல்லை. தனிநிலைச் செய்யுள் இலக்கணம் கூறும் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் ஆகியவற்றிற்கு மட்டுமே உள்ளது. இவ்வுரை யாப்பருங்கல விருத்தி, இலக்கண விளக்கச் செய்யுள் உரை ஆகியவற்றைப் பின் பற்றிச் செல்லுகின்றது. அவ்விரு நூல்களுள்ளும் காட்டிய உதாரணப் பாடல்களை இவ்வுரையும் காட்டுகின்றது. |