வரையறுத்த பாட்டியல் வரையறுத்த பாட்டியல் என்பது பத்துப் பாடல்களால் ஆன சிறு நூல். இதனை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. பாட்டியல் கூறும் பத்து வகைப் பொருத்தங்களுள் மங்கலப் பொருத்தத்தை மட்டும் வரையறுத்துச் சுருக்கிக் கூறுவதால் இது இப் பெயர் பெற்றது. இச் சிறு நூலுக்குப் பழைய உரை உள்ளது. பாட்டியல் கூறும் செய்தியை விளக்கி உதாரணங்காட்டிச் செல்லுகின்றது. இலக்கண விளக்கப் பாட்டியல் இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியநாத தேசிகரின் மைந்தராகிய தியாகராய தேசிகர் இலக்கண விளக்கம் பொருளதிகாரத்தின் பிற்சேர்க்கையாகப் பாட்டியல் என்ற பகுதியை இயற்றி நூலோடு சேர்த்தார். பாட்டியலுக்குத் தாமே உரையும் செய்தார். இப் பாட்டியல் இலக்கண விளக்கத்துடன் சேர்ந்தே உள்ளது. இதனைத் தனியாகப் பாட்டியல் நூலாகக் கருதலாம்; இலக்கண விளக்கப் பாட்டியல் என்று புதிய பெயரையும் தரலாம். இப்பாட்டியலின் பதிகம், ஐந்திய லும்தன் புந்திசான் றாகத் தந்தைமுன் உரைத்த நூல்முடிபு எய்த அந்தண் ஆரூர்ச் சந்திர மௌலி அருள்உள் கொண்டு மருள்மனம் நீங்கி, பவம்கொள் பாட்டியல் இலங்க உரைத்தனன் வாய்மைதிரு தியாக ராய தேசிகனே என்று கூறுகின்றது. இப் பாட்டியலில் தொல்காப்பிய மரபியல், செய்யுளியல் (நூல் பற்றிய கருத்து), பொதுப்பாயிரச் செய்தி, பாட்டில் கூறும் செய்தி யாவும் திரட்டித் தரப்பட்டுள்ளன. 11. வடமொழியின் செல்வாக்கு தொல்காப்பியம் சொல்லதிகார உரையில் சேனாவரையர் வடமொழிக்கும் தமிழுக்கும் இலக்கணம் ஒன்றே என்ற கருத்திற்குக் கால்கோள் செய்தார். அக் கருத்தினை வீர சோழிய ஆசிரியரும் அதற்கு உரைகண்ட பெருந்தேவனாரும் பேணி வளர்த்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரயோக விவேகம் இயற்றிய ஆழ்வார் திருநகரி சுப்பிரமணிய தீட்சிதரும், இலக்கணக் கொத்தின் ஆசிரியரான சாமிநாத தேசிகரும் |