வடமொழிக்கு ஏற்றம் தந்து சிறப்புச் செய்து இரு மொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்று சாதித்தனர். தமிழறிஞர்கள் இத்தகைய ஆசிரியர்களின் கொள்கைகளைத் தகர்த்து எறிந்தனர்; கண்டித்துத் தமிழின் பெருமையை நிலை நாட்டினர். நாவலர் சோமசுந்தர பாரதியார் “தமிழ் மரபு உணர்ந்து பேணாத வட நூல் வல்ல உரைகாரரால் இத் தகவிலா வழக்குப் பெருகி, தமிழ் ஒரு தனி மொழி அன்று என இகழும் பியோக விவேகம், இலக்கணக்கொத்துப் போன்ற பனுவல்களும் தமிழில் எழுதப்பட்டன” என்று கண்டிக்கின்றார் (நற்றமிழ் (1955) பக்கம் 25). தமிழ்மொழி இத்தகைய சூழலை வென்று விளங்குவதை அறிஞர் பெருமக்கள் வியந்து போற்றுகின்றனர். மணி, திருநாவுக்கரசு முதலியார், “வட நாட்டினின்றும் வீறிவந்த ஆரியம் தெலுங்கை அடிமைப்படுத்தியது. மலையாளத்தை மணந்து கொண்டது; கன்னடத்தில் கை வைத்தது; துளுவத்தைச் சூழ்ந்து கொண்டது: செந்தமிழ் மருங்கிலும் செல்லத் தொடங்கியது. ஆனால் அச்சூழலில் அகப்படாது தனது ஒப்பற்ற தன்மையை இன்றும் அழியாமல் காத்துக்கொண்டு அதனோடு சமமாய் எதிர்த்து நின்று ‘நான் நினக்கு ஒருவாற்றானும் எளியேன் அல்லேன்; எவ்வாற்றானும் நின்னினும் சிறந்தேன் என்று ஒளிரும் தமிழ் அன்னையின் கன்னித் தன்மையை என்னென்பேன்!” என்று பாராட்டுகின்றார் (பல்பொருட் கட்டுரை பக்கம் - 145). 12. சாமிநாத தேசிகர் சாமிநாத தேசிகர் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய நாட்டில் பிறந்தவர், இவர் தோன்றியது சைவ வேளாளாளர் குடியாகும். இளமை முதற்கொண்டே இவர் கல்வியைச் செல்வமாகவும் கற்றோரைச் சுற்றமாகவும் கொண்டு ஒழுகினார். இவருக்குக் தமிழ் கற்பித்தவர், மயிலேறும் பெருமாள் பிள்ளை. வடமொழி பயிற்றியவர் கனகசபாபதி சிவாசாரியார். தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களை எழுத்து எண்ணிப் படித்தவர் என்று தம் காலத்து அறிஞர்களால் இவர் பாராட்டப்பெற்றார். |