அ + ய் = ஐ அ + வ் = ஒள என்பது இவர் கருத்தாகும். “போலி எழுத்தைப் போற்றுதல் கடனே” (இலக்-91) என்று ஒரு நூற்பா இயற்றி, “ஈரெழுத்துக்கூடி ஓர் எழுத்துப் போல வருவனவற்றைத் தள்ளாது கொள்ளுக” என்று உரை கூறிப் பின் வரும் விளக்கமும் எழுதியுள்ளார்: “வடநூலார் இவ்விலக்கணத்தைத் தள்ளாது சமானாக்கரம் என்று பெயரிட்டு இவ்விரண்டினையும் தழுவினர். அது பற்றித் தமிழ் நூலார், ‘இணை எழுத்து’ என்று மொழிபெயர்க்க. மற்றது ‘போலி எழுத்து’ என்று மொழிபெயர்த்ததனால், போலிச் சரக்கு போலி இலக்கணம் போலியுரை என்னும் சொற்களைப் போல இதனையும் கருதி, முன்னும் பின்னும் பாராது தள்ளினார். அது பற்றியே இச் சூத்திரம் செய்தனம் என்க” வாக்கியத்தின் வகைகள் வாக்கியத்தின் வகைகளைப்பற்றி இவர் ஆராய்ந்துள்ளார். ‘ஒரு தொடர் பல தொடர் எனத் தொடர் இரண்டே’ (இலக்-124) என்று சூத்திரம் இயற்றி, ‘இவற்றை வட நூலார் ஏக வாக்கியம், பின்னவாக்கியம் என்பர். அதனான் மொழி பெயர்த்தனம் என்க” இக்காலத்தவர், ஒரு தொடர் என்பதனைத் தனி வாக்கியம் (Simple sentence) என்றும், பல தொடர் என்பனைத் தொடர் வாக்கியம் (Complex sentence) என்றும் வழங்குகின்றனர். 13. சுப்பிரமணிய தீட்சிதர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார் திருநகரியில் தோன்றிய சுப்பிரமணிய தீட்சிதர் பிரயோகவிவேகம் என்ற இலக்கண நூலையும் உரையையும் இயற்றினார். இந்நூல் முழுக்க முழுக்க வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றியது. நூலின் தொடக்கத்தில் “பாணினி பதஞ்சலி ஆகிய வடமொழி வல்லுநரின் தாள் வணங்கி நூலை இயம்புகிறேன்” என்று கூறுகின்றார். தம் நூல் அரங்கேறிய வரலாற்றினை, பேர்கொண்டு நின்றபிர யோக விவேகத்தைச் சீர்கொண்ட ராமபத்ர தீக்கிதன்தான்-நேர்கொண்டு |