கேட்டான் இனிக்கண்ணாற் கேட்கும் பதஞ்சலிதான் கேட்டால்என் கேளாக்கால் என் என்ற வெண்பாவால் உணர்த்துகின்றார். தம் நூலுக்கு வடமொழிப் பெயரை வைத்ததற்குக் காரணம் கூறும்போது, “வடமொழிப் பிரயோக விவேகத்தினும் சொல்லிலக்கணம் அல்லது எழுத்திலக்கணம் கூறாமையின் சொற்பிரயோக விவேகம் என்றாம்” என்று உரைக்கின்றார். தாம் இயற்றிய நூலுக்குத் தாமே பதிகமும் உரையும் செய்து அவ்வாறு செய்தல் வடமொழி மரபு என்கிறார். “வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார். இந்நூலும் வடநூலைத் தற்பவமாகச் செய்தலான், யாமும் பதிகமும் உரையும் செய்து உதாரணமும் காட்டினாம்” என்று கூறுகின்றார் (காரக படலம்-3). காரக படலத்தின் முதற் சூத்திரவுரையிலேயே, “வட மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இலக்கணம் ஒன்று” என்றும், “வட மொழிக்கு உரிய குறிஎல்லாம் வடமொழிக்கேயன்றித் தமிழ் மொழிக்கும் உரியன” என்றும் கூறுகின்றார். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்ற சூத்திரம் நன்னூலாருக்குப் பெருமை தருவதாகும். இதனை எடுத்துக்காட்டி இந்நூலாசிரியர், “இச்சூத்திரம் பாணினி கூறியவாறு கூறினார். அது வடமொழியிற் காட்டுதும்” என்கின்றார். (திங்ஙுப்படலம்-16). நூலின் இறுதியில், “இந் நூலுள் சந்தேகம் தோன்றுவதனை மகாபாடியம், கையடம், சித்தாந்த கௌமுதி, சத்த கௌமதி, வாக்கிய பதீயம், அரிபீடிகை, தாதுவிருத்தி, பதமஞ்சரி, சத்த கௌத்துவம் கற்றவரைக் கேட்க. காசிகா விருத்தி, பிரக்கிரியா கௌமுதி என்னும் இரண்டினும் சித்தாந்தம் பிறவாது ஆதலின் அவை கற்றோரைக் கேளாது ஒழிக” என்று உரைக்கின்றார். இவை எல்லாம் வடமொழியில் இவர்க்குள்ள பற்றினையும் புலமையினையும் உணர்த்தும் சான்றுகளாகும். வேற்றுமை காட்டல் மிகச்சில இடங்களில் வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள வேற்றுமைகளைச் சுட்டுகின்றார். திங்ஙுப் படலத்தில் (6-ஆம் சூத்), “இருமைக்கு உதாரணம் வடமொழிக்கல்லது தமிழ்மொழிக்கு இல்லை” என்று தெளிவுபடுத்துகின்றார். மேலும், |