பக்கம் எண் :

உரையாசிரியர்கள்646

    சாற்றிய தெய்வப் புலவோர் மொழிக்கும் தமிழ்மொழிக்கும்
    வேற்றுமை கூறின் திணைபால் உணர்த்தும் வினைவிகுதி
    மாற்றரும் தெய்வ மொழிக்குஇல்லை பேர்க்குஎழு வாய்உருபும்
    தேற்றிய லிங்கம் ஒருமூன்றும் இல்லை செழுந்தமிழ்க்கே

என்றும் கூறி இருமொழி இலக்கணத்தையும் வேறுபடுத்துகின்றார் (திங்ஙுப்
படலம்-15).

வடமொழித் திணிப்பு

    பிரயோகவிவேகம் என்ற தலைப்பில் நூலை இயற்றிய இவர், நூலின்
உட்பிரிவுகளுக்கும் வடமொழியை ஒட்டியே பெயரிட்டுள்ளார். காரக படலம்,
சமாச படலம், தத்தித படலம், திங்ஙுப்படலம் என்ற பெயர்களை
அமைத்துள்ளார்.

     வடசொற்களை, தமிழ்மொழியின் ஒலிமுறைக்குச் சிறிதும் ஒவ்வாத
வகையில் தம் நூலில் எடுத்தாளுகின்றார். சந்தம், வாதேசம், திஙந்த வினை,
திங்ஙு போன்ற சொற்களை இவர் உரையில் காணலாம்.

     எளிய தமிழ்ச் சொற்களுக்கும், அவற்றோடு ஒத்த வடசொற்களைத்
தந்து விளக்கம் தருகின்றார். கீழே சிலவற்றைக் காண்போம்:

     “இயற்கை என்பது சகசம். செயற்கை என்பது ஆகந்துகம்” (காரக-5).

     “அலங்கார நூலார் இசை எச்சத்தைக் காகு என்பர்” (திங்ஙு-16)

     “இலக்கணையாவது, பெயராக வினையாக நிற்கும் சொற்கள் தத்தம்
பொருளை உணர்த்தாது, பொருளின் சம்பந்தப் பொருளையும் தாற்பரியப்
பொருளையும் அறிவித்தல்” (திங்ஙு-13)

     “உரிச்சொல்லாவது பொருளும் தானும் பேதமின்றி அபேதமாதற்குரிய
சொல்... அர்த்த நாரீசுவரன் என்னும் பார்வதி பரமேசுவரன் போலப்
பொருளும் சொல்லும் பேதாபேதமாய் வரும் என்பாரும் உளர். காளிதாசனும்
வாகர்த்தாவிய என்னும் சுலோகத்தால் அவ்வாறு கூறுவன்” (சமாச - 1)

சைவப்பற்றும் தமிழ்ப்புலமையும்

    இவர் சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். தம் உரைகளில்
“மானேந்தி, பிறை சூடி, அம்பலத்தாடி” என்ற பெயர்களை உதாரணங்
காட்டுகின்றார்.